மென்டர் பதவிக்கு தோனி வாங்கும் சம்பளத்தைப் பார்த்து வியந்துபோன ரசிகர்கள்!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகிவிட்ட தல தோனி ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பங்கேற்று விளையாடி வருகிறார். இதைத்தொடர்ந்து தோனியை டி20 உலகக்கோப்பை போட்டிக்கு ஆலோசகராக பிசிசிஐ நியமித்துள்ளது. இந்தப் பணிக்கு அவர் சம்பளம் எதுவும் வாங்கப் போவதில்லை என்றும் சேவை அடிப்படையில் இந்தப் பணியை செய்கிறார் என்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2021 போட்டியைத் தொடர்ந்து டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது. இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த டி20 உலகக்கோப்பை கொரோனா காரணமாக தற்போது ஐக்கிய அரபுஎமிரேட்ஸில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இடம்பெறும் இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோலி செயல்படுகிறார். பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பணியாற்றுகிறார். இந்நிலையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ஆலோசகராக கேப்டன் மகேந்திரசிங் தோனியை பிசிசிஐ அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பை எதிர்பார்க்காத ரசிகர்கள் பெரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

மேலும் பிசிசிஐயின் செயல்தலைவர் ஜெய்ஷா கூறும்போது “டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு ஆலோசகராக இருக்கும் மகேந்திர சிங் தோனி ஒரு ரூபாய் கூட பி.சி.சி.ஐ யிலிருந்து ஊதியம் பெறவில்லை. இந்தியக் கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றும் சேவைக்கு நன்றி“ என்று தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி சிறப்பு குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகள் இடம்பெற்றுள்ளன. இதைத்தவிர இலங்கை, வங்களா தேசம், அயர்லாந்து உள்ளிட்ட 8 அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடுகின்றன. தகுதிச்சுற்றில் வெற்றிப்பெறும் 4 அணிகள் மற்ற குரூப் அணிகளுடன் இணைந்து விளையாட உள்ளன.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் கலந்துகொள்ள இந்தியக் கிரிக்கெட் அணிக்கு தல தோனி ஆலோசகராக பணியாற்றவுள்ளார். மேலும் அவர் இந்த போட்டிக்கு மட்டுமே ஆலோசகராக இருப்பதற்கு அவர் சம்மதித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.