மரவள்ளித்தோப்பில் தனிமை ..! தட்டிக்கேட்ட கணவன் கொலை.....!

  • IndiaGlitz, [Friday,July 16 2021]

கள்ளக்காதலனும், மனைவியும், கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் கடலூரில் அரங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டம், மீனாட்சி பேட்டையில் உள்ள ஜே.ஜே நகரைச் சேர்ந்தவர் தான் 37 வயதுடைய முருகன். இவருக்கும், தனது சொந்த அக்கா மகள் வனஜாவிற்கும் சென்ற 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை உள்ளது. ஆனால் வனஜாவோ குழந்தைகள் மேல் அக்கறை இல்லாமல், சென்ற 5 வருடங்களாக கிருஷ்னகுமாருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இதுகுறித்து கணவர் முருகன் பலமுறை கண்டித்தும், வனஜா கேட்கவில்லை. கடந்த 6-ஆம்தேதி, வீட்டிற்கு அருகில் உள்ள மரவள்ளித்தோட்டத்தில், வனஜாவும், கிருஷ்ணகுமாரும் தனிமையில் இருந்துள்ளனர். இதையறிந்த முருகன் அவர்களை கையும் களவுமாக பிடித்ததால், ஆத்திரமடைந்த இருவரும் கைலியால் முருகன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். சடலத்தை அங்கேவிட்டுவிட்டு ஒன்றும் தெரியாதவர்கள்போல் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டனர்.

இதன்பின் தெருவில் உள்ள அனைவரும் உறங்கியபின்பு, முருகனின் சடலத்தை எடுத்துவந்து, வீட்டில் உள்ள சந்தில் போட்டுள்ளனர். விடிந்தபின்பு தடுக்கி விழுந்து இறந்து விட்டார் என்று பொதுமக்களிடம் கூறி நாடகமாடியுள்ளனர். இதையடுத்து முருகன் உடலை அடக்கம் செய்யவும் ஏற்பாடுகள் நடந்துள்ளது. ஆனால் இவரின் சாவில் மர்மம் உள்ளதாக எண்ணிய மக்கள், குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்துள்ளனர். தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குறிஞ்சிப்பாடி அரசு மருத்துமனையில் பிரேத பரிசோதனை முடிந்தவுடன் உடலை திரும்ப கொடுத்துள்ளனர்.

காவல் துறையினர் வனஜாவிடம் விசாரித்ததில், நானும் அதே பகுதியில் உள்ள கிருஷ்னகுமாரும் கள்ளத்தொடர்பு வைத்திருந்தோம். கணவர் 6-ஆம் தேதி எங்களை கையும் களவுமாக பிடித்ததால், எங்களுடைய தொடர்புக்கு இடையூறாக இருந்த அவரை கொலை செய்துவிட்டோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதனடிப்படையில் போலீசார் கிருஷ்னகுமாரையும், வனஜாவையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.