Download App

யு-டர்னில் எனது கதாபாத்திரம்: பெருமிதத்துடன் கூறிய பூமிகா

தளபதி விஜய் நடித்த 'பத்ரி' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'சில்லுன்னு ஒரு காதல்', 'சிறுத்தை' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை பூமிகா நாளை வெளியாகும் சமந்தாவின் 'யூடர்ன்' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பூமிகா கூறியதாவது:

ஒரு திரைக்கலைஞர் வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களை  செய்யும்போது அங்கீகாரம் பெறுவார், அவரும் அதனால் திருப்தி அடைவார்.  'யு டர்னில்' என் கதாபாத்திரம் நான் கடந்த காலங்களில் செய்ததை போல் அல்ல. என் நடிப்பை ரசிகர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் சமந்தா ஒரு பிரமாதமான நடிகை என்றும் படப்பிடிப்பில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார் என்றும் இந்த படத்தில் மிகச்சிறப்பாக அவர் நடித்துள்ளதாகவும் பூமிகா பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் நானும் பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளேன், தற்போது இந்த வகையிலான திரைப்படங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. திரைக்கதை எழுத்தாளர்கள் இது போன்ற திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்களை தொடர்ந்து எழுத வேண்டும்" என்று பூமிகா கேட்டுக்கொண்டார்.

"தமிழ் திரைப்படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் என்னை தேடி வருகின்றன. ஆனால், கதை மற்றும் படக்குழுவும் சரியாக அமைய வேண்டும். அப்போது தான் அது சரியாக ரசிகர்களிடம் சென்று சேரும்.  நான் 1999 ஆம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமானேன், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகின்றன. என் பெற்றோர் வெற்றி, தோல்வியை எவ்வாறு சமமாக அணுகுவது என்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் வெற்றி, தோல்வி எதுவும் என்னை பாதிப்பதில்லை" என்று தன்னம்பிக்கையோடு முடிக்கிறார் பூமிகா சாவ்லா.