close
Choose your channels

ஆள் அரவம் இல்லாத இடத்தில் அடிக்கடி முளைக்கும் உலோகத்தூண்… விலகுமா மர்மம்?

Wednesday, December 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆள் அரவம் இல்லாத இடத்தில் அடிக்கடி முளைக்கும் உலோகத்தூண்… விலகுமா மர்மம்?

 

கடந்த நவம்பர் 18 ஆம் தேதி அமெரிக்காவின் உட்டா பாலைவனப் பகுதியில் திடீரென்று ஒரு உலோகத்தூண் முளைத்தது. பறவைகள் கூட செல்லப் பயப்படும் கடுமையான பாலைவனப் பகுதியில் திடீரென்று 12 அடி உயரமுள்ள ஒரு கல் நடப்பட்டு இருந்தால் எப்படி இருக்கும்? எனவே இந்தத் தூண் பற்றிய தகவல் காட்டுத் தீயைவிட படுவேகமாக சமூக வலைத்தளத்தில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்த மர்மத்தூண் முழுவதும் உலோகத்தால் இருந்ததாகக் கூறப்பட்டது. இதனால் அதை அருகில் சென்று புகைப்படம் எடுக்க வேண்டும் எனப் பலரும் முயன்றனர். இதையடுத்து ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் இந்த மர்மத்தூணை யார் நட்டு இருப்பார்கள்? ஒருவேளை ஓடிசி படத்தின் ரசிகர்கள் யாராவது நட்டு வைத்திருப்பார்களா? அல்லது இது ஏலியன்களின் வேலையாக இருக்குமா? எனப் பல்வேறு கோணங்களில் சந்தேகங்கள் முளைத்தன.

இப்படி சமூக வலைத்தளத்தில் விவாதம் சூடு பிடித்துக் கொண்டு இருக்கும்போதே அடுத்த 48 மணி நேரத்தில் அந்த தூண் இருந்த இடத்தில் இருந்து திடீரென்று காணாமல் போனது. மேலும் அந்த இடத்தில் முக்கோண தகரம் மட்டுமே இருந்ததாகச் செய்திகள் வெளியாகியது. அதையடுத்து கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி ருமேனியா நாட்டின் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் மீண்டும் 13 அடி உலோகத்தூண் ஒன்று முளைத்தது. இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அந்த மர்மத்தூண் மாயமாகியதாகவும் தகவல் வெளியானது.

அதேபோல பிரிட்டனில் தற்போது கண்ணாடியால் ஆன மர்மத்தூண் ஒன்று முளைத்து இருப்பதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்தத் தூண், மற்ற தூண்களைப் போல இல்லாமல் கண்ணாடியால் செய்யப்பட்டு இருப்பதால் Isle of wight எனப் பெயரிடப்பட்டு இருக்கிறது. இப்படி அமெரிக்கா, ரூமேனியா, போலந்து, பெல்ஜியம், அடிலெய்ட், ஆஸ்திரேலியா, டார்ட்மோர், பிரிட்டன் என மர்மத்தூண்களின் தோற்றமும் மறைவும் தொடர்ந்து உலகம் முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மர்மத்தூண்களைக் குறித்த விசாரணையைத் தற்போது உலக நாடுகள் தொடங்கி விட்டன.

பொதுவாக இந்த மர்மத்தூண்கள் அனைத்தும் ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் வைக்கப்படுவதும், அடுத்து ஏதாவது ஒரு தேடலில் அது மனித கண்ணில் பட்டவுடன் மறைந்துபோவதும் வாடிக்கையாகவே மாறிவிட்டது. இதனால் கடந்த சில வாரங்களாக மர்மத்தூண்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. இந்நிலையில்  2 தூண்கள் பற்றிய உண்மை நிலவரங்கள் வெளியாகி இருக்கிறது.

கடந்த நவம்பர் மாத இறுதியில் அமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் தோன்றிய மர்மத்தூணை தி மோஸ்ட் ஃபேமஸ் ஆர்டிஸ்ட் நிறுவனம் வடிவமைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் இந்த தூணை விற்பனை செய்வதற்காக கலிஃபோர்னியா மற்றும் உட்டா பகுதிகளில் இந்நிறுவனம் வைத்ததாகக் கூறியுள்ளது. இதேபோல பிரிட்டன் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த isle of wight கண்ணாடி தூணை National trust வைத்தாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். அகற்றப்பட்ட தூணை விற்பனை செய்வதற்காக இந்நிறுவனம் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்ததாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

இதனால் பல நாட்களாக மர்மத்தூண் வடிவில் இருந்த மர்மம் விலகி இருக்கிறது. ஆனால் ரூமேனியா, போலந்து, பெல்ஜியம், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வைக்கப்பட்ட மர்மத்தூண்களைப்  பற்றிய மர்மங்கள் இன்னும் முடிவடையாத நிலைமையிலேயே இருந்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.