Download App

Naadodigal 2 Review

நாடோடிகள் 2 -  சமூக போராளிகள் 

தமிழ் சினிமாவின் இப்போதைய ட்ரெண்ட் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பது. அப்படி எடுக்கப்பட்ட படங்கள் ஒரு சிலவற்றை தவிர பெரும்பாலானவைகள் தோல்வியே அடைந்திருக்கின்றன. சசிகுமார் சமுத்திரக்கனி அவர்களின் நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தை பத்து வருடங்கள் கழித்து எடுத்திருக்கிறார்கள். படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்கிறதா முதல் பாகத்திற்கு பெருமை சேர்கிறதா என்பதை பொருத்து இருந்தே பார்க்க வேண்டும். 

சசிகுமார் அஞ்சலி மற்றும் பரணி மதுரை பக்கத்தில் ஒரு நகரத்தில் ஜாதி கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்து ஜாதி இல்லா சமூகம் உருவாக இளைஞர்களை திரட்டி மாநாடு எடுக்க முற்படுகிறார்கள். சென்னை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்தது போல் போலீஸ் சமூக விரோதிகளை வைத்து தாக்கி காயப்படுகிறார்கள் அப்பொழுதும் பெரியார் சிலை உடையாமல் காக்கிறார்கள் கூட்டத்தில் கழகம் செய்தவர்களையும் இனம் காண்பது எப்படி என்று செய்து காட்டுகிறார்கள். இது போக ஒரு திருநங்கையான நமீதாவை போலீஸ் வேலை கிடைக்க உதவுகிறார்கள். இதற்கிடையில் சசிகுமாருக்கு வீட்டில் பெண் பார்த்துக்கொண்டே இருக்கிறார் அவர் அம்மா ஆனால் ஒருவருக்கும் அவரை பிடிப்பதில்லை. கடைசியில் தன சாதியை சேர்ந்த பணக்கார வீட்டு இளம் பெண்ணான அதுல்யா ரவி பிடிக்கிறது என்று சொல்ல சந்தோஷமாக திருமணம் செய்கிறார். முதலிரவு அன்று சசிகுமாருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது அதில் அவர் சொந்த வாழ்க்கை மட்டுமல்ல அவர் கொள்கைகளே தவிடு பொடியாகும் ஒரு நிலை ஏற்படுகிறது. சசிகுமாரும் அவரது சகாக்களும் எப்படி இந்த பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் அதில் ஜெய்கிறார்களா என்பதை மீதி கதை. 

சமீபத்தில் வந்த சில படங்கள் சறுக்கிய நிலையில் இது சசிகுமாருக்கு தெம்பு தரும் பாத்திரம் என்றே சொல்ல வேண்டும். முந்தய பாகத்தில் வந்த அதே சுறுசுறுப்பும் சமுதாய அக்கறை கொண்ட கோப கண்களும் மெசேஜ் சொல்லும்போது நம்பகத்தன்மையிலும் எதிரிகளை பந்தாடும் விறு விறு ஆக்ஷனிலும் சசி உயர்ந்து நிற்கிறார். அதுல்யாவிடம் வழியும் போதும் அஞ்சலியின் காதலில் மெல்ல விழும்போதும் கூட ரசிக்க வைக்கிறார். அஞ்சலி மிக அழகாகவும் இருக்கிறார் ஒரு பெண் போராளியாக கதாநாயகனுக்கு சமமாக ஆக்ஷனிலும் வசனங்களிலும் மின்னுகிறார். கதாநாயகனுக்கே அவனும் ஒரு ஜாதி பற்றும் பெண்ணை புரியாத தன்மையும் உள்ளத்தையும் சுட்டி காட்டுவதில் கைதட்டல் வாங்குகிறார். அப்பாவி இளம் பெண்ணாக அதுல்யா ரவி கீழ் ஜாதி காதலனுக்கும் அன்பான பெற்றோருக்கும் நடுவில் சிக்கி தவிப்பது என்று அளவான நடிப்பை தந்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக வரும் விக்ரம் ஆனந்தும் கச்சிதம். ஞானசம்பந்தம் நமோ நாரயணன் அந்த தனி மனித கம்யூனிஸ்ட் போராளி மது அருந்திவிட்டு பொருளாதாரம் பேசுபவர் அஞ்சலியின் அப்பாவாக வருபவர் அந்த பெண் வில்லி என அனைவரும் நல்ல நடிப்பை தந்திருக்கிறார்கள். 

நாடோடிகள் ௨ படத்தின் மிக பெரிய பலம் சமூக போராளிகளின் அவசியத்தையும் அவர்களை அரசு எப்படி ஒடுக்க பாக்கிறது என்பதையும் ஆழமாக பதிவு செய்திருப்பதே. ஒத்த மனத்துடைய சாதி எதிர்ப்பாளர்கள் ஒன்று கூடினால் சாதி கொடுமையை ஒழிக்க முடியும் எனும் பதிவு இக்கால சமுதாயத்துக்கு மிகவும் தேவையான ஒன்று. மூன்றாம் பாலினர்களுக்கு நடக்கும் அவலங்களை காட்டுவதோடு நின்று விடாமல் அவர்கள் முன்னேறி வருவதையும் காட்டி சமுதாயம் எப்படி அவர்களுக்கு மேலும் கை கொடுக்க வேண்டும் என்பதையும் சொன்ன விதம் மிகவும் பாராட்டுக்குரியது. சதா மது அருந்தும் ஒரு மேல் ஜாதி காரர் சமத்துவம் பேசுவதும் எப்படி குடிகள் தங்கள் உடலை கெடுத்து மக்களுக்கு இலவசங்களை அரசிடம் பெற்று தருகிறார்கள் என்பதை சொல்லும் இடத்தில தியேட்டர் சிரிப்பொலியில் நனைகிறது. ஜாதி போர்வையில் எப்படி சுற்றியிருப்பவர்கள் பெற்றோரை தங்கள் அன்பு குழந்தைகளுக்கு எதிராக திருப்பி விட்டு கொலை செய்கிறார்கள் என்பது நிச்சயம் அப்படி பட்டவர்களுக்கு ஒரு அபய மணியாக ஒலித்து விழிப்புணர்வு ஏற்பட வழி வகுக்கும். நாடோடிகள் படத்தின் ரசிகர்களுக்கு காதலர்களுக்காக சசியும் பரணியும் மீண்டும் ஒரு முறை சம்போ சிவா சம்போ என்று சம்பவம் செய்யும் பகுதி நிறைவை தரும். 

மைனஸ் என்று பார்த்தல் முன்பாதியின் விறுவிறுப்பு பின்பாதியில் இல்லாமல் போவதை சொல்லலாம். ஆக்ஷன் காட்சிகளும் அநியாயத்துக்கு நம்பகத்தன்மையில்லாமல் அலப்பறை செய்கின்றன குறிப்பாக அந்த பஸ் கிளைமாக்ஸ். திரைக்கதை கட்டுப்பாடில்லாமல் எங்கெங்கோ செல்லும் உணர்வும் பின்பாதியில் ஏற்படுகிறது. நாடோடிகள் படத்தில் இருந்த அந்த புதுமை உணர்வு இதில் ஆரம்பம் முதலே மிஸ்ஸிங். 

ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை படத்தோடு நன்கு ஒன்றி போய் இனிமையாக காதில் ஒலிக்கிறது அதே போல் பாடல்களும் கதையோடு பின்னியிருப்பது பலம். ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு எ ல் ரமேஷின் எடிட்டிங் கனகச்சிதம். சமுத்திரக்கனி தன்னுடைய சமூக பார்வையை அழுத்தம் திருத்தமாக நேர்மை குறையாமல் படத்தில் பதிவு செய்ததில் வெற்றி பெற்றிருக்கிறார். 

நாடோடிகள் 2 இக்காலத்திற்கு தேவையான நல்ல சமூக அக்கறை உள்ள கருத்துகளுக்காகவும் நல்ல நடிப்புக்காகவும் குடும்பத்துடன் தேட்டருக்கு போய் பார்க்க கூடிய நல்ல படம். 

Rating : 3.0 / 5.0