கேப்டனுடன் மலரும் நினைவுகள்: நடிகை நதியாவின் நெகிழ்ச்சி பதிவு

  • IndiaGlitz, [Saturday,June 26 2021]

தமிழ் திரையுலகில் கடந்த 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை நதியா என்பது அனைவரும் அறிந்ததே. அதன் பின்னர் அவர் திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டாலும், தற்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக உள்ளார். அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களையும், தான் நடித்த படங்களின் புகைப்படங்களையும் பதிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அவர் தற்போது விஜயகாந்துடன் நடித்த ஒரு திரைப்படம் குறித்த மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார். கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’பூ மழை பொழியுது’. விஜயகாந்த், நதியா, சுரேஷ், உள்பட பலர் நடித்த இந்த படத்தை அழகாபுரி அழகப்பன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘நதியா நதியா நைல் நதியா’ என்ற எஸ்பிபி சித்ரா பாடிய பாடல் அப்போதே சூப்பர்ஹிட்டாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்து 34 வருடங்கள் கழித்து நடிகை நதியா கூறியிருப்பதாவது: விஜயகாந்த் அவர்களுடன் நான் நடித்த முதல் திரைப்படம், ‘பூ மழை பொழியுது’. அழகப்பன் அவர்கள் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ஆர்டி பர்மன் இசையமைத்திருந்தார். நான் முதன் முதலாக இந்த படத்தில்தான் வெளிநாட்டு படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். ஜப்பான் மற்றும் ஹாங்காங் நாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.