நீங்க மனசு வச்சா போதும்...! நாசூக்காக வாக்கு சேகரித்த நாட்டாமை..!

  • IndiaGlitz, [Thursday,March 25 2021]

மக்களாகிய நீங்கள் மனது வைத்தால், மக்கள் நீதி மய்யம் கூட்டணி கட்சி நிச்சயம் வெற்றி பெரும் என சமக கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

பல வருடங்களாக அதிமுக, திமுக கட்சி என மாறி வந்த சரத் அணி, இம்முறை கமலின் மநீம அணியுடன் கூட்டணி வைத்துள்ளது. கமல் 40 தொகுதிகள் சரத் கட்சிக்கு ஒதுக்க, 37 தொகுதிகளில் மட்டுமே ஆள் திரட்டி, 3 தொகுதிகளை திருப்பி கொடுத்து விட்டார் சரத்குமார். அதிலும் 3 தொகுதிகளில் வேட்புமனுக்களை நிராகரிக்கப்பட்டது. இறுதி நேரத்தில் லால்குடி தொகுதியில் போட்டியிட இருந்த முரளிகிருஷ்னன் தனது வேட்புமனுவை வாபஸ் வாங்கி, திமுக-வில் இணைந்தார். தற்சமயம் 33 தொகுதிகளில் மட்டுமே சமக களமிறங்குகிறது.

இந்நிலையில் கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களுடன் இணைந்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார் சரத்குமார். அண்மையில் கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்க்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது,

தேர்தல் நேரத்தில் எங்கள் கூட்டணிக்கு கெட்ட பெயரை உருவாக்குவதற்கே ரெய்டு நடத்துகிறார்கள். நீங்கள் மனசு வைத்தால், எங்கள் கூட்டணிக்கட்சி கட்டாயமாக வெற்றியடையும். அரசியல் என்பது எங்களுக்கு தொழில் அல்ல, கமலை வெளியூர்காரன் என பரப்புரை செய்வது வேடிக்கையாக உள்ளது. ஜனநாயக நாட்டில் யார் எங்கு வேண்டுமானாலும் நின்று போட்டியிடலாம். கமல் மக்களுக்கு கட்டாயமாக நல்லதை செய்வார். வேண்டுமென்றே மக்கள் நீதி மையத்தை டார்க்கெட் செய்து கட்சியினர் வீடுகளில் சோதனை செய்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. கருத்துக்கணிப்பு முடிவுகள் சென்ற ஆட்சியிலே பொய்யாக்கப்பட்டது என்பது நமக்கு தெரியும். திராவிடக் கட்சிகள் வாக்குகளை பணம் கொடுத்து வாங்குகின்றனர்.மநீம கூட்டணி ஏ டீம், பிற அணிகள் பீ டீம். எங்களின் கூட்டணிக்கு வெற்றி தாமதமாக கிடைக்குமே தவிர, வெற்றி என்பது உறுதி என்று கூறினார்.