நீட்தேர்வு முடிவு… தேர்ச்சி பட்டியலில் குளறுபடியா???
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு (நீட் தேர்வு) தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் கொரோனாவுக்கு நடுவிலும் நீட் தேர்வு இந்தியா முழுவதும் கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. மேலும் நீட் தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு மீண்டும் மறுவாய்ப்பு வழங்கப்பட்டு அத்தேர்வு கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வுக்கான தேர்ச்சி முடிவுகள் நேற்று மாலை வெளியானதை அடுத்து அந்தப் பட்டியலில் பல குளறுபடிகள் இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.
அந்தப் பட்டியலில் தெலுங்கானாவில் 50,392 பேர் நீட் தேர்வினை எழுதி உள்ளனர் எனக் கூறப்பட்டு இருக்கிறது. அதில் 1,738 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும் அதன் தேர்ச்சி சதவீதம் 49.15% எனத் தவறாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல திரிபுரா மாநிலத்தில் 3,546 பேர் மட்டுமே தேர்வு எழுதிய நிலையில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என பட்டியலில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்தகவல் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047 பேர் மட்டுமே தேர்வு எழுதியதாகவும் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 37,301 பேர் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல உத்திரப்பிரதேசத்தில் 1,56,992 பேர் தேர்வு எழுதிய நிலையில் 7,323 பேர் தேர்ச்சி என்றும் தேர்ச்சி விகிதம் 60.79% என்றும் தவறான புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. இந்தத் தவறுகள் ப்ரிண்டிங் செய்யும்போது ஏற்பட்ட குளறுபடி எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் சரியான மறு அறிக்கையை வெளியிட தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்து வருவதாகக் தகவல்கள் கூறப்படுகின்றன.
தமிழகத்தைப் பொருத்தவரை இந்த ஆண்டு 99,610 பேர் தேர்வு எழுதிய நிலையில் 57.44% பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதனால் தமிழகம் இந்திய அளவில் 15 ஆவது இடத்தைப் பிடித்து இருக்கிறது. கடந்த ஆண்டு 1,23,78 பேர் தேர்வு எழுதி அதில் 48.57% தேர்ச்சி பெற்றனர். இதனால் கடந்த ஆண்டு 23 ஆவது இடத்தைப் பிடித்த தமிழகம் தற்போது 15 ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.