Download App

Nenjamundu Nermaiyundu Odu Raja Review

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா: கிளைமாக்ஸில் மட்டும் நேர்மை உண்டு

யூடியூப் பிரபலங்கள் பலர் இணைந்து எடுத்த முதல் முயற்சிதான் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்த படம் யூடியூப் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களுக்கும் பிடிக்குமா? என்பதை பார்ப்போம்

பிராங்க் ஷோ நடத்தி வரும் ரியோ ராஜ், விக்னேஷ் காந்த் இருவரையும் ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்கும் ராதாரவி, தன்னுடைய மூன்று டாஸ்க்குகளையும் சரியாக முடித்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக கூறுகிறார். அனைத்து சேனல்களிலும் நீங்கள் இருவர் தான் பிரேக்கிங் செய்தியாக இருக்க வேண்டும், மனநிலை சரியில்லாத ஒருவரை எம்.எல்.ஏ ஆக்க வேண்டும், ஒரு பெண் கொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டும். இந்த மூன்று டாஸ்க்குகளையும் ராதாரவி ஏன் கொடுக்க வேண்டும்? இந்த மூன்று டாஸ்க்குகளையும் இருவரும் முடித்தார்களா? அதனால் என்னென்ன பிரச்சனைகள் வந்தது? என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை.

ரியோராஜ் தான் இந்த படத்தின் ஹீரோ. முடிந்தவரை கேரக்டரை மெருகேற்றியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் கொஞ்சம் திணறுகிறார். ரொமான்ஸ் சுத்தமாகவே வரவில்லை. ஒரு முழு நடிகராக, இவர் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும். 

படத்தின் மிகப்பெரிய மைனஸ் விக்னேஷ்காந்த். காமெடி செய்து அது எடுபடாவிட்டால் கூட பரவாயில்லை, அவரது நடிப்பில் சுத்தமாக காமெடியே இல்லை என்பது பரிதாபத்துக்குரியது. டயலாக் மாடுலேஷன் அதைவிட கொடுமையாக உள்ளது. 

ரியோ, விக்னேஷ்காந்த் இருவருமே கிட்டத்தட்ட முழு படத்தையும் ஆக்கிரமித்து கொண்டதால் நாயகி ஷிரின் கேரக்டர் கூட டம்மியாகத்தான் உள்ளது. அவருக்கு தனது நடிப்பை வெளிப்படுத்த ஒரு காட்சி கூட படத்தில் இல்லை என்பது பெரும் சோகம். 

நாஞ்சில் சம்பத் ஒருசில காட்சிகளில் வந்தாலும் கலகலப்பூட்டுகிறார். மக்கள் குறித்து அவர் கொடுக்கும் விளக்கமும், பணத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர் பேசும் வசனமும் கைதட்டல் பெறுகிறது. குறிப்பாக "எல்லோரும் ஓட்டு போடுபவர்களுக்குத்தான் காசு கொடுப்பார்கள், ஆனால் நான் ஓட்டு எண்ணுபவர்களுக்கு காசு கொடுப்பேன்" என்று அவர் பேசும் வசனம் பலத்த கைதட்டலை பெறுகிறது

யூடியூப் கூட்டத்தில் இருந்து ராதாரவி மட்டும் தனித்து நிற்கிறார். பிளாஷ்பேக் காட்சியை அவர் கூறும் காட்சியில் அவரது அனுபவம் தெரிகிறது. இந்த கேரக்டருக்கு ராதாரவி சரியான தேர்வு

ஷபீர் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை. பின்னணி இசை ஓகே லெவல். செந்தில் குமார் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். தேவையில்லாத காட்சிகளை எடிட்டர் எடிட் செய்திருந்தால் படம் ஒருமணி நேரம் கூட தேறாது என்பதால் எடிட்டர் அப்படியே விட்டுவிட்டது போல் தெரிகிறது.

இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இந்த படத்தில் 'பொது இடத்தில் ஒரு அநியாயம் நடக்கும்போது மக்கள் வேடிக்கை பார்ப்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் அது கிளைமாக்ஸில் ஒரு இருபது நிமிட காட்சி மட்டும்தான். அதுவரை படத்தை அவர் கஷ்டப்பட்டு இழுத்து கொண்டு போவது தெரிகிறது. இந்த படத்தை  காண வரும் அனைவரும் நிச்சயம் காமெடியை எதிர்பார்த்துதான் வருவார்கள். ஆனால் ஓரிரு காமெடிகள் தவிர மற்ற அனைத்து காமெடிகளும் மொக்கைதான். சுத்தமாக லாஜிக் இல்லாத திரைக்கதை. ஒரு அமைச்சரின் மகனை ரியோ, விக்னேஷ் மாட்டிவிடுவது எல்லாம் டிராமா போல் உள்ளது. நாஞ்சில் சம்பத் மகளாக நாயகியை காண்பிக்க வேண்டிய அவசியமே இல்லை. 

மொத்தத்தில் கடைசி இருபது நிமிட கிளைமாக்ஸில் ஒரு நல்ல விஷயத்தை இயக்குனர் சற்றே அழுத்தமாக கூறியுள்ளார் என்பதால் அதற்காக இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம்
 

Rating : 2.8 / 5.0