சொந்த கட்சியினரே வைத்த சூன்யம்: நேபாள பிரதமர் பதவிக்கு ஆபத்து!!!

  • IndiaGlitz, [Wednesday,July 01 2020]

 

நேபாளத்தின் தற்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒளி. இவரை பதவியில் இருந்து விலகுமாறு சொந்தக் கட்சியினரே வலியுறுத்தும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. காரணம் கடந்த ஞாயிற்றுக் கிழமை தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கு இந்தியா முயற்சி செய்கிறது என்ற குற்றச்சாட்டை இவர் தெரிவித்து இருந்தார். இக்கருத்து அண்டை நாட்டுடன் இருக்கும் நட்புணர்வை கெடுக்கும் விதத்தில் அமைந்து விடும் என அச்சம் தெரிவித்து ஆளும் கட்சியின் தலைவர் மற்றும் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலரும் பிரதமரை பதவியில் இருந்து விலகுமாறு கட்டாயப் படுத்தி வருக்கின்றனர்.

நேபாளம் இந்தியாவுடன் 1800 கிலோ மீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொண்டு வருகிறது. அதில் இந்தியாவிற்கு சொந்தமான உத்திரகாண்ட் பகுதியில் உள்ள காலாபானி, லிம்பியதூரா, லிபுலேக் போன்ற பகுதிகளை நேபாள வரைபடத்துடன் இணைத்து புதிய வரைபடத்தை சில வாரங்களுக்கு முன்னர் அந்நாட்டின் அரசு வெளியிட்டது. லிபுலேக் என்பது சீனாவின் திபெத் பகுதியையும் இந்தியாவின் உத்திரகாண்ட் பகுதியையும் இணைக்கும் வகையில் உள்ள ஒரு முக்கியமான பகுதி என்பதும் குறிப்பிடத் தக்கது. இப்படி உருவாக்கப்பட்ட புதிய வரைபடத்துக்கான ஒப்புதலையும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வைத்து கையெழுத்தும் ஆகியிருக்கிறது. இதுகுறிச்ச சர்ச்சையில் இந்தியாவுடன் சிக்கல் ஏற்படும் நிலையை ஆளும் கட்சி உருவாக்கி இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அந்நாட்டில் வலுத்து வருகிறது.

நேபாளம் இப்படி இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளை தனது வரைபடத்துடன் இணைப்பதற்கு சீனா கொடுக்கும் அழுத்தமே காரணமாகவும் கூறப்படுகிறது. இந்தியாவின் எல்லைக் கோட்டுப் பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த ஜுன் 6 ஆம் தேதி இருநாட்டு படைகளும் எல்லையில் இருந்து விலகிக்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் சீனாவின் படைகள் விலகாமல் இருந்ததாகவும் அதைத் தட்டிக் கேட்ட இந்திய இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப் பட்டதாகவும் இந்தியா தரப்பில் கூறப்படுகிறது. இதனால் கல்வான் பகுதியில் 20 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்த கொடூரச் செயலும் நடைபெற்றது.

தற்போது சீனா கொடுக்கும் அழுத்தால் பிரதமர் அண்டை நாட்டுடன் பகை ஏற்படும் வகையில் கருத்துகளை தெரிவித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இந்தியாவுடன் நேபாளம் பல ஆண்டுகளாக நட்புணர்வுடன் இருந்து வருகிறது. ஆனால் தற்போது இருக்கும் கம்யூனிச ஆட்சியின் காரணமாக ஆளும் பிரதமர் சீனாவுடன் நட்பு பாராட்டி வருகிறார். சீனா கொடுக்கும் அழுத்தத்தால் வரைபடத்தையும் மாற்றி அமைத்து இருக்கிறார். பிரதமர் பதவியில் இருந்து தன்னை நீக்க இந்தியா முயற்சி செய்கிறது என்றக் குற்றச் சாட்டையும் தெரிவித்து இருக்கிறார். இது நேபாளத்தின் ஆட்சிக்கு நல்லதல்ல என்ற கருத்தைக் கூறி ஆளும் தரப்பினரே பதவியை விட்டு விலகுமாறு பிரதமருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

நேபாளத்தில் இரண்டு பெரிய கம்யூனிச கட்சிகள் ஒன்றிணைந்து தற்போது ஆட்சி செய்து வருகின்றன. அதன் பெயர் நேபாளம் கம்யூனிசக் கட்சி. இதன் தலைவர் பிராசண்டா என அழைக்கப் படும் நேபாளத்தின் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தவால். தற்போது இவர்தான் அதிபர் ஷர்மா ஒளியை பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகிறார். இவரைத் தவிர ஆளும் கட்சியின் முக்கியத் தலைவர்களும் இந்தியாவிற்கு எதிராக பல்வேறு கருத்துகளை பிரதமர் கூறி வருகிறார். சீனாவின் கை பொம்மையாக பிரதமர் மாறிவிட்டார் என்ற குற்றச் சாட்டை வெளிப்படையாகத் தெரிவித்து பதவி விலகுமாறு கோரிக்கை வைத்து இருக்கின்றனர்.