அபிஷேக் எலிமினேட் ஆக முக்கிய காரணங்கள் என்னென்ன? நெட்டிசன்கள் அலசல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அனைவரும் எதிர்பார்த்தபடி அபிஷேக் எலிமினேட் செய்யப்பட்டார் என்பது நேற்றைய நிகழ்ச்சியை பார்த்தவர் அனைவரும் அறிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது ஸ்டாட்டர்ஜியை உபயோகப்படுத்திய போதிலும் சக போட்டியாளர்கள் ஒருசிலர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற போதிலும் மக்களுக்கு அவரை பிடிக்காமல் போனதற்கு என்னென்ன காரணங்களாக இருக்கலாம் என நெட்டிசன்கள் அலசி ஆராய்ந்து சில கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அந்த கருத்துக்கள் குறித்து தற்போது பார்ப்போம்

முதலாவதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற செய்தி வெளியானபோதே அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் எதிர்மறை கருத்துக்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு அவருக்கு எதிரானவர்கள் சமூக வலைத்தளங்களில் இருந்துள்ளனர் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. இதனை மிகச் சரியாக இந்த வார கேப்டன் சிபி கணித்திருந்தார். அபிஷேக் பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே வரும்போதே எதிர்ப்புகளை சம்பாதித்து கொண்டு தான் வந்திருக்கிறார் என்று அவர் தெரிவித்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் கமல்ஹாசன் குறித்தும் அவர் அவதூறாக பேசிய பழைய வீடியோ வைரலானது அவருக்கு முதல் நாளே நெகட்டிவ் இமேஜை கொடுத்தது.

இரண்டாவதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் போட்டியாளர்கள் அனைவருமே அனைத்து சீசன்களின் எபிசோடுகளை பார்த்து என்னென்ன விதமாக விளையாட வேண்டும்? எப்படிப்பட்ட ஸ்டாட்டர்ஜியை பயன்படுத்த வேண்டும் என்று தயாராகி தான் வருவார்கள் என்பது ஒரு சின்ன குழந்தைக்கு கூட தெரியும். தாமரைசெல்வி போன்ற அப்பாவி போட்டியாளர் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கவில்லை என்று சொன்னால் அனைவரும் நம்ப வாய்ப்பு உள்ளது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து தந்திரங்களையும் ஒரே வாரத்தில் பயன்படுத்த தொடங்கிவிட்ட அபிஷேக், பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு எபிசோட் கூட பார்க்கவே இல்லை என்று கமல்ஹாசன் அவர்களிடமே அவர் கூறியதும், கமல்ஹாசன் உள்பட சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஒருவர் கூட அதை நம்பவில்லை என்பதும் அவருக்கு மிகப்பெரிய மைனஸாக அமைந்தது. கடைசிவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கவில்லை என்ற பொய்யை அவர் மெய்ண்ட்டன் செய்ததும் அவருடைய மிகப்பெரிய தவறுகளில் ஒன்று

மூன்றாவதாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒவ்வொருவரும் தங்களுடைய தனித் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கான நிகழ்ச்சி என்பதையே மறந்துவிட்ட அபிஷேக், அனைத்து போட்டியாளர்களின் விளையாட்டையும் தானே விளையாட வேண்டுமென்று முன் வந்தது தான். தான் சொல்கிற படிதான் எல்லோரும் கேட்க வேண்டும், தன்னுடைய ஐடியாவின்படி தான் எல்லோரும் நடக்க வேண்டும் என்று அவர் நினைத்தது, குறிப்பாக தாமரை, ஸ்ருதி, இசைவாணி ஆகியோர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முயற்சித்தது, நிரூப்ப்பின் வேலைகளில் குறுக்கிட்டது ஆகிய அத்துமீறல்களை கூறலாம்.

நான்காவதும் மிக முக்கியமானமானதும் என்னவெனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டே பிக்பாஸை அளவுக்கு மீறி அவர் விமர்சனம் செய்துது. கடந்த சீசனில் நிஷாவும் இந்த சீசனில் பிரியங்காவும் பிக்பாஸை விமர்சனம் செய்திருந்தாலும் அது காமெடியாக அனைவராலும் எடுத்து கொள்ளப்பட்டது. ஆனால் பிக்பாஸை ‘டேய் பெரியப்பா உனக்கு வக்கேறேண்டா ஆப்பு’ என கொஞ்சம் சீரியஸாகவே பிக்பாஸை அபிஷேக் பேசியது பிக்பாஸ் குழுவினர்களுக்கே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கலாம். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வரும் பிக்பாஸை ஒருமையில் பேசியது, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளருக்கு மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்து இருக்கலாம் என்பதே நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.

மேற்கண்ட நான்கு காரணங்களால்தான் அபிஷேக் வெளியேற்றப்பட்ட இருக்கலாம் என்பது நெட்டிசன்களின் கணிப்பாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இருபதே நாட்களில் சக போட்டியாளர்கள் மனதை அவர் கவர்ந்து உள்ளார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் நேற்று அவர் எலிமினேட் ஆகப்போகிறார் என்பது முடிவானதும், பாவனி உள்பட காயின்கள் வைத்திருந்த அனைவருமே அவரை காப்பாற்ற முன்வந்ததை கூறலாம். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல கண்டெண்ட் கொடுக்கும் ஒரு போட்டியாளராக அபிஷேக் இருந்தார் என்பதை மறுக்க முடியாது. எனவே இந்த இருபது நாட்கள் பிரபலத்தை வைத்து அவர் வெளியே சென்றாலும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் உள்பட பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்பதும் அவருடைய வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.