close
Choose your channels

2 நிமிடம் போதும்.பாம்புக் கடியை அடையாளம் காண புதிய கருவி, கேரளாவில் கண்டுபிடிப்பு..!

Thursday, December 5, 2019 • தமிழ் Comments

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி பகுதியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்த மாணவி ஷஹலா ஷெரின் பாம்பு கடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்காத ஆசிரியர், தலைமை ஆசிரியர், மருத்துவர்கள் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.`பாம்பு கடித்துவிட்டது' என மாணவி கூறியபோது, `அது ஆணி குத்தியதால் ஏற்பட்ட காயம்' என ஆசிரியர்கள் தெரிவித்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அரசின் நடவடிக்கை காரணமாக, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, முன்ஜாமீன் பெறும் முயற்சியில் ஆசிரியர்களும் மருத்துவர்களும் இறங்கியுள்ளனர்.

இந்தநிலையில், பாம்பு கடித்தவரின் ஒரு துளி ரத்தத்தைப் பரிசோதித்து, கடித்தது எந்தவகைப் பாம்பு என்பதை இரண்டு நிமிடத்தில் கண்டுபிடிக்கும் ஸ்ட்ரிப் ஒன்றை திருவனந்தபுரம் ராஜீவ்காந்தி சென்டர் பார் பயோ டெக்னாலஜி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. `இந்த ஸ்ட்ரிப் மூலம் பாம்பு கடித்த விஷம் உள்ளதா, எந்தவகை பாம்பு கடித்தது என யார் வேண்டுமானாலும் கண்டுபிடித்துவிடமுடியும்' என்கிறார்கள் மருத்துவர்கள்.

``பெண்கள் கருவுற்றிருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிக்கும் ஸ்ட்ரிப்பை அடிப்படையைக் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் கோடு ஸ்ட்ரிப் கன்ட்ரோல் யூனிட்டாகும். அடுத்தடுத்த நான்கு கோடுகளும் பாம்பின் இனங்களைச் சுட்டிக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூர்க்கன் வகை பாம்பு, அணலி வகை பாம்பு, வெள்ளிக்கொட்டன், ரத்தமண்டலி ஆகிய பாம்புகளின் வகைகளை இதன்மூலம் கண்டுபிடித்து அதற்கேற்ற சிகிச்சை அளிக்க முடியும்'' என இந்த ஸ்ட்ரிப் கண்டுபிடிப்பின் தலைவராக இருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ``பாம்பு கடித்த இடத்தில் உள்ள திரவம் அல்லது ரத்தத்தை ஸ்ட்ரிப்பில் விட்டால் இரண்டு நிமிடத்தில் கடித்த பாம்பின் வகையைக் கண்டுபிடித்துவிடலாம். பாம்பின் வகைக்கு நேரே உள்ள கோடு அதற்கான சிக்னலைத் தெரிவிக்கும். பத்து நிமிடம் ஆகியும் எந்த கோட்டிலும் சிக்னல் தெரியவில்லை என்றால் பாம்பு கடித்த விஷம் ஏறவில்லை என அர்த்தம். மூன்று வருடங்கள் ஆய்வு செய்து இந்த ஸ்ட்ரிப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு ஸ்ட்ரிப் தயாரிக்க சுமார் 50 ரூபாய் ஆகிறது.வியாபாரரீதியில் தயாரிக்கும்போது இன்னும் குறைந்த விலையில் இதனை வழங்க முடியும். இது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிடம் ஒப்படைக்கப்படும். அவர்களின் பரிசோதனை முடிந்த பிறகு விற்பனைக்கு வரும்" என்றார்.

இந்தியாவில் ஆண்டுக்கு 49,000 பேர் பாம்பு கடித்து இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. `மூர்க்கன் வகை பாம்பு, அணலி வகை பாம்பு, வெள்ளிக்கொட்டன், ரத்தமண்டலி ஆகிய வகையான பாம்புகள் கடித்து இறந்தவர்கள் அதிகம் என்பதால், இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என்கின்றனர் மருத்துவர்கள்.

 

Get Breaking News Alerts From IndiaGlitz