ஒமிக்ரான் பரவல்… தனது திருமணத்தையே நிறுத்திய பெண் பிரதமர்!

  • IndiaGlitz, [Monday,January 24 2022]

நியூசிலாந்து நாட்டில் 70 ஒமிக்ரான் பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டதை அடுத்து தனது திருமணத்தையே நிறுத்தி இருக்கிறார் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்சன்.

கொரோனா பரவலை முழு மூச்சுடன் கட்டுப்படுத்திய நாடுகளுள் ஒன்று நியூசிலாந்து. இவர்கள் பயன்படுத்திய சில வழிமுறைகளைப் பார்த்து உலக நாடுகளே வியந்தன. மேலும் தங்களது சிறிய தீவு நாட்டில் இருப்பவர்களுக்கு கொரோனா பரவாமல் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை அந்நாட்டில் 15,550 பாதிப்புகள் மட்டுமே உறுதிச்செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் திருமண விழாவில் கலந்து கொண்டபிறகு ஒமிக்ரான் உறுதிச் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இவர்களைப் போலவே நியூசிலாந்து நாட்டில் பலரும் திருமண விழாக்களில் தொடர்ந்து கலந்து கொண்டுவருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த ஒமிக்ரான் பாதிப்பு தற்போது 70 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து பிரதமர் ஜெசிந்தா, நாட்டு மக்கள் அனைவரும் ஒமிக்ரான் பாதிப்பில் தவித்து வருகின்றனர். எனக்கும் நாட்டு மக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. சில நேரங்களில் நாம் நினைப்பது எல்லாம் நடந்துவிடாது. வாழ்க்கை இப்படித்தான் இருக்கப்போகிறது எனக் கூறி பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருந்த தனது திருமணத்தையே நிறுத்திவிட்டார்.

பிரதமர் ஜெசிந்தாவிற்கும் அவரது நீண்டகால நண்பர் கிளார்க் கேஃபோர்ட்டிக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் பிப்ரவரியில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அந்தத் திருமணத்தை ஒமிக்ரான் காரணமாக அவர் நிறுத்தியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.