தூக்குதண்டனையை தள்ளிப்போடுவதற்காக தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் நிர்பயா குற்றவாளி..!

  • IndiaGlitz, [Thursday,February 20 2020]

நாட்டையே அதிரவைத்த நிர்பயா வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா, சுவரில் மோதி தலையில் காயம் ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்ததாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிர்பயா வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை தூக்குதண்டனை தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் தனித்தனியே நீதிமன்றத்தில் மனு அளித்து, குடியரசுத் தலைவர் கருணை மனுவுக்கு விண்ணப்பம் அனுப்பியதால் தூக்குதண்டனை நிறைவேற்றப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.

குற்றவாளிகள் இதுவரை கோரிக்கை வைத்த மனுக்களுக்கு சட்டரீதியான வாய்ப்புகள் அனைத்தும் மறுக்கப்பட்ட நிலையில், 2020 மார்ச் 3-ஆம் தேதி காலை 6 மணிக்கு நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி உத்தரவிட்டது. எந்த காரணமும் கொடுக்கப்படாமல், இந்த முறையேனும் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கண்ணீர் மல்க ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அனைத்து சட்டரீதியான வாய்ப்புகளும் தீர்ந்துவிட்ட குற்றவாளியான வினய் ஷர்மா, தலையை சுவரின் மீது மோதி காயங்கள் ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார். உடனடியாக சிறைத்துறை அதிகாரிகள் அவரை சிறை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்ததாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திஹார் சிறையின் மூத்த அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்துக்கு தெரிவித்துள்ள தகவலில், “குற்றவாளி வினய் ஷர்மா சரியான மனநலத்துடன் இருக்கிறார். அவருக்கு நடத்தப்பட்ட சைக்கோமெட்ரி பரிசோதனைகளில் சரியான பதில்களையே அளித்திருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.