நோ எண்ட்ரி போர்ட் மாட்டிய நித்தியானந்தா… இந்தியர்களுக்குமா இந்த அவலம்?

  • IndiaGlitz, [Wednesday,April 21 2021]

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் 2 ஆவது அலை தீவிரம் பெற்று இருக்கிறது. இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிய நோய்ப்பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி இருக்கிறது. மேலும் கடந்த 10 நாட்களாக தினம்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்திற்கு குறையாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து கைலாசாவிற்கு வரும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று நித்தியானந்தா புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் இந்தியா போன்று அதிக கொரோனா பாதிப்பு கொண்ட நாடான ஐரோப்பிய யூனியன், பிரேசில், மலேசியா போன்ற நாட்டு பக்தர்களுக்கும் நித்தியானந்தா அனுமதி மறுத்து இருக்கிறார். ஆன்மீகவாதியாக தன்னை அறிவித்துக் கொண்ட நித்தியானந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார். மேலும் இந்தியாவில் இருந்து யாருக்கும் தெரியாமல் தப்பியோடவும் செய்தார். அதோடு வெளிநாட்டிற்கு சென்ற அவர் அங்கு ஒரு தனித்தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா எனப் பெயரிட்டு அங்கிருந்து ஆன்மீகச் சேவை ஆற்றப்போவதாக அறிவித்தார்.

அதோடு தான் உருவாக்கிய கைலாசா நாட்டிற்கு புது கரன்சி, ரிசர்வ் பேங்க் உள்ளிட்ட புதிய சட்டசபையை உருவாக்குவது வரைக்கும் நித்தியானந்தாவின் தடபுடலான ஏற்பாடுகள் அனைத்தும் அரங்கேறின. இந்நிலையில் கைலாசா நாட்டிற்கு விசா கொடுக்கப் போவதாகவும் விருப்பம் உள்ளவர்கள் கைலாசாவிற்கு வருகை தரலாம் என்றும் நித்தியானந்தா அறிவித்து இருந்தார். இதையடுத்து ஹோட்டல் தொழில் நடத்த விருப்பம் தெரிவித்து சிலர் சிக்கலில் மாட்டிக் கொண்ட கதையும் தமிழகத்தில் நடைபெற்றது.

இப்படி கைலாசா எனும் நாட்டைப் பற்றி அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பேசியும் வீடியோ பதிவிட்டும் வந்த நித்தியானந்தா தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பை ஒட்டி நித்தியானந்தா இந்தியகளுக்கும் கையை விரித்து விட்டாரே எனக் கிண்டலடித்து வருகின்றனர்.