எரியும் நெருப்பில் குதித்த போலீஸ் அதிகாரி! சமூக வலைத்தளங்களில் வைரல்

  • IndiaGlitz, [Saturday,May 04 2019]

தீ விபத்து ஒன்றில் வீடு ஒன்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும்போது எரியும் வீட்டுக்குள் குதித்த காவல்துறை எஸ்.ஐ ஒருவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.

உத்தரபிரதேசத்தில் கீதா-புல்சிங் தம்பதியரின் சொந்த வீட்டில் சமீபத்தில் திடீரென தீப்பிடித்தது,. இதனையடுத்து உடனே வீட்டை விட்டு வெளியேறிய தம்பதிகள் தீயணைப்புத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் அளித்தனர்.

இந்த நிலையில் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க கடுமையாக போராடிக்கொண்டிருந்தபோது, அந்த தம்பதியர் வீட்டின் உள்ளே இரண்டு சிலிண்டர்கள் இருப்பதாகவும், அவை வெடித்தால் கடும் சேதம் உண்டாகும் என்றும் கூறினர். இதனையறிந்த அங்கு வந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அகிலேஷ்குமார் என்பவர் பக்கத்து வீட்டாரிடம் இரண்டு போர்வை வாங்கி தனது உடலில் போர்த்தி கொண்டு எரியும் வீட்டிற்குள் குதித்தார். வீட்டினுள் இருந்த சிலிண்டர்களை அவர் வெளியே கொண்டு வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது.

அகிலேஷ்குமார் போர்வையை போர்த்தியபடி சிலிண்டர்களை வெளியே கொண்டு வரும் காட்சியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவருக்கு நெட்டிசன்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.