நாட்டிற்குள் நுழைந்தால் சுட்டுத்தள்ளுவோம்… கொடூரமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் வடகொரியா!!!

 

சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டுத் தள்ள அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டு இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா பரவலைத் தடுப்பதற்கு இத்தகைய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வடகொரியா உலகத்தின் தொடர்பில் இருந்து எப்போதும் விலகியே இருக்கும். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வெளியிட்ட போதும் வடகொரியா தனது கொரோனா பாதிப்பு நிலைமையைக் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் கடந்த ஜுலை மாதத்தில் வடகொரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள கேசாங்கி எனும் பகுதியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதையடுத்து கேசாங்கி எல்லைப் பகுதியை முழுவதும் முடக்க அதிபர் கிம் உத்தரவிட்டார். தற்போது சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் யாரும் நுழையக் கூடாது என்றும் நுழைந்தால் சுட்டுத் தள்ளப்படுவார்கள் என்றும் அதிபர் உத்தரவிட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தத் தகவலை தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படைத்தளபதியான ராபர்ட் அம்ரம்ஸ் தெரிவித்ததாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. வடகொரியா இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது குறித்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. காரணம் கொரோனா பரவலின் ஆரம்பக் கட்டத்திலேயே வடகொரியா, சீனாவோடு இருந்த எல்லைப் பகுதி முழுவதையும் மூடிவிட்டது. இந்நிலையில் சீனாவில் இருந்து யாரும் வடகொரியாவிற்கு நுழையக்கூடாது என்றும் நுழைந்தால் சுட்டுத் தள்ளப்படுவார்கள் என்றும் கூறுவது மனிதாபிமானச் செயல் அல்ல எனப் பலரும் கருத்துக் கூறிவருகின்றனர்.