மாட்டுக் கோமியத்தில் சானிடைசரா??? பரபரப்பு ஏற்படுத்தும் புதிய தகவல்!!!

  • IndiaGlitz, [Friday,September 11 2020]

 

மாட்டுக் கோமியம் மற்றும் சாணம் கிருமிநாசினி தன்மைக் கொண்டது என்ற நம்பிக்கை ஒருசிலரிடம் வலுவாக இருந்து வருகிறது. ஆனால் மருத்துவ உலகம் இந்தத் தகவல்களைப் பெரும்பாலும் நிரூபிக்கப்பட முடியாதது எனக்கூறி ஓரம் கட்டிவிடுகிறது. தற்போது கொரோனா காலத்தில் இந்த நம்பிக்கை மேலும் தீவிரம் பெற்று வருவதைப் பார்க்க முடிகிறது.

அகமதாபாத் மாநிலத்தின் குஜராத் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனம் ஒன்று தற்போது மாட்டுக் கோமியத்தை வைத்து சானிடைசரை தயாரித்து உள்ளது. மேலும் இந்தக் கண்டுபிடிப்பு அடுத்த வாரம் விற்பனைக்கு வரவிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஜாம்நகர் பகுதியில் செயல்படும் காம்தேனு திவ்யா ஆஷாதி மஹிலா மண்டலி எனும் பெண்கள் கூட்டுறவு நிறுவனம் G0-Safe என்ற பெயரில் புதிய சானிடைசரை தயாரித்து உள்ளனர். இது மாட்டுக் கோமியத்தை வைத்து உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த பெண்கள் கூட்டுறவு நிறுவனம் மாட்டுக் கோமியத்தை வைத்து உருவாக்கப்பட்ட சுத்தம் செய்யும் கிருமிநாசினி பொருட்களைத் தயாரித்து வெளியிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவை Go-Protect என்ற பெயரில் மேற்தளத்தை சுத்தம் செய்யவும், Go-Clean என்ற பெயரில் அறை சுத்தம் செய்யும் திரவத்தை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது Go-Safe என்ற பெயரில் சானிடைசரையும் இந்தப் பெண்கள் அமைப்பு தயாரித்து வெளியிட இருக்கிறது. மேலும் இந்தப் பொருளை விற்பதற்கு உரிய ஒப்புதலைப் பெற முயற்சிப்பதாகவும் அந்த அமைப்பு கூறியிருக்கிறது. இந்த சானிடைசரில் மாட்டுக் கோமியத்தோடு சேர்த்து வேம்பு, துளசி போன்ற மூலிகைப் பொருட்களை சேர்த்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோன்று ராஜஸ்தானில் இயங்கிவரும் ஒரு நிறுவனம் முன்னதாக மாட்டு சாணத்தில் இருந்து முகமூடிகளைத் தயாரித்து வெளியிட்டு இருந்தது. அதில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட முகக்கவசங்கள் தயாரிக்கப் பட்டதாகவும் பெரும்பாலும் போலீஸ், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கு இந்தவகை முகக்கவசங்கள் விநியோகிக்கப் பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் கவனிக்கத் தக்கது.