ஒரு நுரையீரலைக் கொண்ட இளம்பெண்… கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட வெற்றிக்கதை!

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் ஆக்சிஜன் பற்றாக்குறை, உயிரிழப்பு எனத் தொடர்ந்து எதிர்மறையான செய்திகளையே பார்த்து வருகிறோம். இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஒரே ஒரு நுரையீரலை மட்டும் கொண்டு இருந்தாலும் அவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் திகம்கர்க் எனும் இடத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் 39 வயது இளம்பெண் பிரஃபுலித் பீட்டர். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த மருத்துவமனையில் இருந்த தலைமை மருத்துவர்கள் உட்பட பலரும் கவலை அடைந்துள்ளனர். காரணம் பிரஃபுலித்துக்கு ஒரே ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு எக்ஸ்ரேவின்போது பிரஃபுலித்துக்கு ஒரே ஒரு நுரையீரல் மட்டும் இருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் பிரஃபுலித்தால் கொரோனாவில் இருந்து குணமாக முடியுமா என்ற சந்தேகத்தைப் பலரும் எழுப்பி உள்ளனர்.

இந்நிலையில் பிரஃபுலித் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார். மேலும் இந்த நாட்களில் யோகா, பிராணயாமா அதோடு சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். மேலும் நுரையீரல் சுவாச உறுப்பை செயல்திறன் கொண்டதாக மாற்றுவதற்கு அடிக்கடி பலூன்களை ஊதி உள்ளார். இப்படி தனது வலிமையான மன உறுதியால் பிரஃபுலித் தற்போது கொரோனா நோயில் இருந்து வெற்றிக்கரமாக வெளிவந்துள்ளார்.

இதுகுறித்து கருத்துப் பகிர்ந்து கொண்டுள்ள அவர் கொரோனா நோயில் இருந்து குணமாகி விடுவேன் என உறுதியாக நம்பினேன். எனது சிறு வயதிலேயே ஒரு அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் எனது ஒரு நுரையீரலை அகற்றி உள்ளனர். இந்த விஷயம் கடந்த 2014 ஆம் ஆண்டுதான் எனக்கு தெரியவந்தது. 2 டோஸ் தடுப்பூசிகளை நான் ஏற்கனவே செலுத்திக் கொண்டேன். மேலும் சுவாச உறுப்புகளை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள நான் ஓயாது முயற்சி செய்து கொண்டே இருந்தேன் எனத் தெரிவித்து உள்ளார். கொரோனா நோய் தீவிரம் அடைந்து வரும் இந்த சூழ்நிலையில் பிரஃபுலித்தின் கதை பலருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.