Download App

Odu Raja Odu Review

'ஓடு ராஜா ஓடு': புத்திசாலித்தனமான ஓட்டம்

கோலிவுட் திரையுலகில் புதியதாக வரும் இயக்குனர்களின் படைப்புகள் வித்தியாசமாகவும் ரசிக்கும் வகையிலும் இருப்பதால் புதிய படைப்பாளிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் புதிய இரட்டை இயக்குனர்களான நிஷாந்த் மற்றும் ஜத்தீன் இயக்கிய ''ஓடு ராஜா ஓடு;' படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

பணத்திற்காக கட்டப்பஞ்சாயத்து முதல் கொலை வரை செய்பவர் நாசரும் அவருடைய தம்பியும். ஆனால் இவர்களின் தந்தை சாருஹாசன் சாகும்போது இது எல்லாத்தையும் விட்டுவிட்டு திருந்துங்கள் என்று சத்தியம் வாங்கிவிட்டு செத்து போகிறார். தந்தைக்கு கொடுத்த சத்தியத்தை கடைபிடிக்க முடிவு செய்கிறார் நாசர். இதனையறிந்து அவருடைய எதிரிகள் நாசரின் இடத்தை பிடிக்க முயற்சிக்கின்றனர். ஒரு குரூப் நாசரை கடத்தி பணம் கேட்ட மிரட்டவும், இன்னொரு குருப் நாசரை கொலை செய்யவும், இன்னொரு குரூப் நாசரின் உயிரை தற்செயலாக காப்பாற்றவும் செய்கின்றனர். இந்த மூன்று குரூப்புகளும் 24 மணி நேரத்தில் செய்யும் குழப்பங்கள், ஆள்மாறாட்டங்கள், சொதப்பல்கள் ஆகியவையும் கடைசியில் நாசருக்கு என்ன ஆனது என்பதும் தான் இந்த படத்தின் மீதி கதை. 

மனைவி ஆசைப்படும் செட்டாப் பாக்ஸை வாங்க நண்பனுடன் வீட்டை விட்டு வெளியே செல்லும் 'ஜோக்கர்' பட புகழ் குரு சோமசுந்தரம் சந்திக்கும் சின்னச்சின்ன பிரச்சனைகள் அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்படும் அளவுக்கு பெரிதாக மாறுகிறது. இதனை வெகு அருமையாக தனது நடிப்பின்மூலம் வெளிப்படுத்தியுள்ளார் குருசோமசுந்தரம். மனைவியிடம் காட்டும் அன்பு, ஒரு சின்ன பிரச்சனையால் பெரிய பிரச்சனையில் சிக்கிய போதிலும் மனைவிக்காக மீண்டு வர வேண்டும் என்ற துடிப்பு, கடைசியில் மனைவியுடன் வேறொருவரை பார்த்தபின்னரும் சிறிதும் சந்தேகப்படாமல் பக்கத்தில் அமரச்சொல்லி பேசும் வசனமும் குரு சோமசுந்தரம் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்

'லட்சுமி' குறும்படம் மூலம் புகழ்பெற்ற லட்சுமிப்ரியா, மீண்டும் ஒரு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கணவர் குறித்த ஆதங்கங்களை பக்கத்து வீட்டு பையனிடம் கூறுவதும், அதை வைத்தே அந்த பையன் லட்சுமியை கரெக்ட் செய்ய முயலும்போது சீறுவதும், கிளைமாக்ஸில் கணவரிடம் கெட்ட பெயர் வாங்க அந்த பையன் செய்யும் தந்திரத்தை கண்டுகொள்ளாமல் கணவரிடம் இயல்பாக இருப்பதும் என அவர் வரும் காட்சி முழுவதும் நிறைவாக உள்ளது.

நாசருக்கு பெரும்பாலான காட்சிகள் மயக்கமடைந்து படுத்துக்கிடக்கும் காட்சிகள் என்றாலும் அவரது கேரக்டர்தான் படத்தின் ஆணிவேர். நாசரின் மனைவியாக சோனா, கவர்ச்சிக்காகவே படத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடித்த அனந்த்சாமி, ஆசிக் செல்வன் உள்பட அனைவரும் தங்கள் கேரக்டர்களை உணர்ந்து நடித்துள்ளனர். இயக்குனர்கள் ஜதீன் மற்றும் நிஷாந்த் அனைவரையும் சரியாக வேலை வாங்கியுள்ளார். 

தோஷ் நந்தாவின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் வகையில் உள்ளது. பின்னணி இசை ஒரு டார்க் காமெடி படத்திற்கு தேவையான அளவு கச்சிதமாக உள்ளது.

இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் திரைக்கதைதான். முதல் கால் மணி நேர காட்சிகள் ஒன்றுமே புரியவில்லை. அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்ததும் ஆச்சரியமாக இருந்தது. நிவின்பாலி நடித்த 'நேரம்' படத்தின் திரைக்கதை சாயல் இருந்தாலும், மூன்று  வெவ்வேறு சம்பவங்களை ஒரே புள்ளியில் இணைத்து கிளைமாக்ஸில் அனைத்து கேரக்டர்களின் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்த திரைக்கதைக்கு ஒரு சபாஷ். குறிப்பாக மேரி என்ற கேரக்டரை இரண்டு பேர் பிக்கப் செய்ய முயற்சித்து அடித்து கொள்வதும், அதற்கு மேரி கூறிய பதிலால் இருவரும் ஆடிப்போவதும் சிறப்பான காட்சி. சிம்ரன் மற்றும் அவரது கணவர் சிறப்பு தோற்றத்தில் காட்சியளித்து கலக்கியுள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் படத்தில் காமெடி வறட்சி கொஞ்சம் தென்படுகிறது. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அளவுக்கு காட்சிகள் அமைக்க வாய்ப்பு அதிகம் இருந்தபோதிலும் அதனை பயன்படுத்தாமல் கோட்ட்டை விட்டதுபோல் தெரிகிறது. பல காமெடி காட்சிகளில் ஒருசிறு புன்முறுவல் மட்டுமே வரும் காட்சிகளாக படத்தில் இருப்பது ஒரு குறையாக தெரிகிறது

மற்றபடி அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கும் இயக்குனர்கள் மத்தியில் வித்தியாசமான திரைக்கதை, காட்சி அமைப்புகள், கதை சொல்லும் பாணிக்காக நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்

Rating : 3.0 / 5.0