சத்தியமா நான் எரிக்கல: திருச்சி சிறுமி எரிப்பு வழக்கில் கைதான இளைஞர் வாக்குமூலம்

திருச்சியில் 9ஆம் வகுப்பு மாணவி எரித்து மரணமடைந்த வழக்கில் கைதான இளைஞர் தான் சிறுமியை எரித்து கொலை செய்யவில்லை என்றும் இன்னொருவருடன் அந்த சிறுமி போனில் நீண்ட நேரம் பேசியதால் அடிக்க மட்டுமே செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் அதவத்தூர் பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காட்டு பகுதியில் திடீரென எரிந்த நிலையில் மரணம் அடைந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனை செய்தபோது அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்பதை உறுதிசெய்தனர். இருப்பினும் இந்த மரணத்திற்கு யார் காரணம் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த டைல்ஸ் தொழிலாளி செந்தில் என்பவருக்கு சிறுமியிடம் பழக்கம் இருப்பதை அறிந்து அவரிடம் போலீசார் விசாரித்தனர். செந்தில் கொடுத்த வாக்குமூலத்தில் ’சம்பவத்தன்று நான் சிறுமியின் வீட்டுக்கு சென்ற போது அவர் யாரிடமோ நீண்ட நேரம் போனில் பேசிக் கொண்டிருந்தார். இவ்வளவு நேரம் யாரிடம் போனில் பேசுகிறாய், இனிமேல் அந்த நபருடன் பேசக்கூடாது என்று கண்டித்தேன். அதன் பிறகு அவர் முன் காட்டு பகுதிக்கு வந்தபோதும் நீ உன் அப்பா சொல்வதைக் கேள், குடும்பத்தினர் சொல்வதைக் கேள், என்று அறிவுரை செய்தேன். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் நடந்தது. அப்போது அந்த சிறுமியை நான் அடித்தேன். நான் சிறுமியின் குடும்பத்திற்கு பங்காளி முறை. மற்றபடி அவரை எரித்து கொலை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியை செந்தில் தான் கொலை செய்தாரா? அல்லது செந்தில் கண்டித்துவிட்டு சென்றபின் சிறுமியே மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் செந்தில் கூறியபடி சிறுமி யாரிடம் நீண்ட நேரம் போனில் பேசினார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்து உள்ளதாகவும், அவர் பெயர் வினோத் என்றும் அவரையும் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இது குறித்து திருச்சி டிஐஜி ஆனி விஜயா அவர்கள் கூறியபோது இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றும் குற்றவாளிகளை தப்பிக்க விடமாட்டோம் என்றும் அவர் கூறினார்.