5000 விண்ணப்பங்களில் 10 பேர்களுக்கு மட்டுமே அவசர கால அனுமதி: காவல்துறை

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவசர விசயமாக வெளியூர் அல்லது வெளி மாநிலம் செல்ல விரும்புபவர்கள் தமிழக அரசிடம் 75300 01100 என்ற எண்ணில் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து ஒரு சில மணி நேரங்களில் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 5000 பேருக்கு மேல் இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு விண்ணப்பித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவசரகால பயணத்திற்காக இதுவரை 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் ஆனால் பத்து பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அவசர பயணத்திற்கு விண்ணப்பிப்போர் வாகனம், ஓட்டுநர் மற்றும் பயணிப்போர் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் ரத்த சொந்தங்களில் திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவரின் பரிந்துரை கடிதம் வைத்திருப்போருக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.