close
Choose your channels

வைரமுத்துவிற்கு விருது...கிளம்பிய சர்ச்சை...! மறுபரிசீலனை செய்ய ஓ.என்.வி., அகாடமி முடிவு ....!

Friday, May 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரளாவில் இருந்து கவிஞர் வைரமுத்துவிற்கு வழங்கப்போகும் விருது குறித்து பரிசீலனை செய்ய, ஓ.என்.வி., கலாச்சார அகாடமி முடிவெடுத்துள்ளது.

கேரளாவில் மிக மரியாதைக்குரிய விருதாக கருதப்படும் ஓஎன்வி குறுப் இலக்கிய விருது, தமிழ்க் கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து விருது வழங்குவது குறித்து ஏராளமான கண்டனங்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து பரிசீலனை செய்யவேண்டும் என, ஓ.என்.வி கலாச்சார அகாடமி முடிவு செய்துள்ளது.

ஞானபீட விருது பெற்றவர் தான் ஓஎன்வி குறுப், இவர் மிகச்சிறந்த மலையாள இலக்கியவாதியும் கூட. இவர் பெயரில் தான் கேரளாவில் ஆண்டுதோறும் "ஓஎன்வி குறுப்" என்ற விருது இலக்கியத்திற்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை இதுவரை சுகதகுமார், எம்.டி.வாசுதேவன், நாயர், அக்கிதம் அச்சுதன், நம்பூதிரி, லீலாவதி உள்ளிட்ட மலையாள இலக்கியவாதிகள் பெற்றுள்ளனர். இந்த நிலையில் 2020-ஆம் ஆண்டிற்கான இந்த விருதை முதன் முதலாக தமிழகத்தை சேர்ந்த கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள் பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்விருதிற்கு ரூ. 3 லட்சம் ரொக்கமும் கிடைக்கும். அண்மையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் நேரில் சந்தித்து, வைரமுத்து அவர்களை வாழ்த்தினார்.

இதுகுறித்து முதல்வர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, "தேசிய அளவிலான இந்த உயரிய விருதைப் பெறும் மலையாள மொழியல்லாத முதல் கவிஞர் என்ற பெருமையை கவிப்பேரரசு பெற்று, அன்னைத் தமிழுக்கும் சிறப்பு சேர்த்திருக்கிறார். தமிழுக்கு பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசின் இலக்கியப் பயணம் சிறந்திட வாழ்த்துகள்’ என கூறியிருந்தார்.

ஆனால் "மீ டூ" விவகாரத்தில் வைரமுத்துவின் மேல் பாலியல் குற்றச்சாட்டுக்கள் இருந்ததால், இந்த விருதை அவருக்கு வழங்குவதில் பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. #metoo விவகாரத்தில் இவர் மீது புகாரளித்த சின்மயி பதிவிட்டிருப்பதாவது, "இவரை மேடை ஏற்றி மகுடம் சூட்டி, பெரிய்ய யோகியர் மாதிரி scene போடறதெல்லாம் ஒரு பாலியல் குற்றவாளிய encourage பண்ணுற மாதிரி தான்" என பதிவிட்டிருந்தார்.

இது போன்ற தொடர் எதிர்ப்புகள் வந்ததால், ஓ.என்.வி. ஆர்ட் மற்றும் கல்ச்சுரல் அகாடெமி, விருது குறித்து மறுபரீசலனை செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. இது குறித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "விருதுகள் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த ஆண்டு ஓ.என்.வி இலக்கிய விருதை மறுபரிசீலனை செய்ய ஒ.என்.வி கலாச்சார அகாடமி முடிவு செய்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அகாடெமியின் தலைவர் மற்றும் மலையாள திரைப்பட இயக்குனரான அடூர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.