மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களில் அரசியல் செய்ய வேண்டாம்… தமிழக முதல்வர் வேண்டுகோள்!!!

 

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தைக் குறித்து தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் கடும் விவாதங்களை எழுப்பி வருகிறது. இந்நிலையில் இத்திருத்தச் சட்டத்தைக் குறித்து எதிர்மறையான கருத்துகளைக் கூற வேண்டாம் என்றும் மக்கள் மத்தியில் இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு சட்டம் மற்றும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை தமிழ்நாடு அரசு ஆதரித்துள்ளது என்றும் இவை தமிழக விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டம் என்றும் இவை விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்றும் இச்சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைத்துக் கொள்ள வழிவகுக்கும் என்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் கடந்த 18 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அந்த அறிக்கையில் இச்சட்டங்கள் வேளாண் விற்பனைக் கூடங்களுக்கும் உழவர் சந்தை திட்டத்திற்கும் எதிரானது என்றும் விவசாயிகளின் குறைந்த பட்ச ஆதார விலைக்கு எவ்வித உத்தரவாதமும் இதில் இல்லையென்றும் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில்

(அ) விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) அவசரச் சட்டம், 2020

(ஆ) விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) அவசரச்சட்டம், 2020.

(இ) அத்தியாவசியப் பொருட்கள் அவசர திருத்தச் சட்டம், 2020.

ஆகிய சட்டங்கள் 5.6.2020 அன்று அவசர சட்டங்களாக பிறப்பிக்கப்பட்டு, பின்பு இச்சட்டங்கள் மக்களவையில் முன்மொழியப்பட்டு கடந்த 15.9.2020 மற்றும் 17.9.2020 ஆகிய தேதிகளில் இச்சட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தமிழக விவசாயிகளுக்கு நலன் பயக்கும் திட்டங்கள். எனவே இவற்றை அரசியலாக்க வேண்டாம் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.