Download App

Oththa Seruppu Size 7 Review

ஒத்த செருப்பு சைஸ் ஏழு - மீண்டும் புதிய பாதை 

புதிய பாதை மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த பார்த்திபன் இந்த முப்பது ஆண்டுகளில் புது முயற்சிகளை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருப்பவர். இந்த முறை பார்த்திபன் எடுத்திருக்கும் அபார முயற்சி படம் முழுக்க அவர் ஒருவர் மட்டுமே தோன்றி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கட்டி போடுவது. இந்த சிறந்த முயற்சி வெகு ஜனத்தை எந்த அளவுக்கு கவர போகிறது என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். 

படத்தின் ஆரம்பத்தில் மாசிலாமணி என்கிற பார்த்திபனை இரண்டு காவல் துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் வைத்து ஒரு கொலை செய்ததற்காக விசாரிக்கின்றனர். வெளியில் அல்ப ஆயிசில் சாக போகும் தன்னுடைய பன்னிரண்டு வயது மகனும் இருக்கிறான். போலீஸ்காரர்களுக்கும் நமக்கும் படி படியாக யாரிந்த மாசிலாமணி இவன் ஒரு பைத்தியமா மன நலம் பாதிக்கப்பட்டவனா நிரபராதியா அல்லது ஏமாற்றுக்காரனா என்கிற கேள்விகள் மாறி மாறி எழுகிறது. இதனிடையே மாசிலாமணி மேலும் மேலும் சில கொலைகளை தான் செய்ததாக சொல்ல அடுத்து என்ன அவன் என்னாகிறான் அந்த குழந்தைக்கு என்ன நேர்ந்தது என்பதே மீதி திரைக்கதை. 

படத்தில் நமக்கு திரையில் தெரிவது பார்த்திபன் மட்டுமே என்பதால் தன்னுடைய அனுபவ நடிப்பால் பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். எழுத்தாளர் பார்த்திபன் அந்த பாத்திரத்தை ஒரு வட்டத்துக்குள் சிக்காமல் வடிவமைத்ததும் பெரிய பிளஸ். பார்த்திபனின் மனைவியாக காயத்ரி குரலாக மட்டும் வந்தாலும் ஒரு கீழ் நடுத்தர வர்க்கத்து பெண்ணை நம் கற்பனை கண் முன்னாள் நிறுத்துகிறார். மாற்ற அணைத்து குரல் நடிகர்களும் கச்சிதம். 

ஒத்த செருப்பு சைஸ் ஏழு படத்தின் மிக பெரிய பலம் இரண்டு மணி நேரமும் பார்வையாளர்களை சஸ்பென்ஸிலேயே வைத்திருப்பது. பார்த்திபன் தன்னுடைய கூர்மையான வசனங்களில் ஜொலிக்கிறார் ஒரு கீழ் மட்ட விளிம்பு நிலை மனிதனின் ஆதங்கங்களை கொட்டி தீர்த்திருக்கிறார். படத்தின் ஆணி வேறான ஒரு சாதாரண மனிதன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை ஒரு அரசியல்வாதிக்கு சமமாக உபயோகித்து தப்பிப்பது கவர்கிறது. 

மைனஸ் என்று பார்த்தல் இந்த பாத்திரத்தில் தான் நடித்ததற்கு பதிலாக கமல்ஹாசனையோ விஜய் சேதுபதியையோ நடிக்க வைத்திருந்தால் படம் பார்வையாளர்களுக்கு இன்னும் கூடுதல் ஈர்ப்பாக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராக அவரும் இன்னும் அதிகம் மிளிர வகை செய்திருக்குமோ என்ற ஒரு கேள்வி எழுகிறது. அந்த மனைவி கதாபாத்திரத்தை தேவையே இல்லாமல் எதிர்மறையாக சித்தரித்ததனால் கதைக்கு எந்த ஒரு உபயோகமுமில்லை மாறாக நெருடலாக இருக்கிறது. மனமுருகி நெகிழவோ அல்லது மனமுகந்து கைதட்டி பாராட்டவோ பட காட்சிகளில் இடமில்லாதது பெரிய குறையே. 

படத்தின் மிக பெரிய பலம் ரசூல் பூக்குட்டியின் ஒலிபதிவுதான் மற்ற பாத்திரங்கள் திரையில் தோன்றாதபோதும் அவர்கள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி அசத்தியிருக்கிறார். ராம்ஜியின் இயல்பான ஒளிப்பதிவும் சி சத்யாவின் மிகையில்லா பின்னணி இசையும் இரு தூண்கள். இப்படி ஒரு வித்தியாசமான சிந்தனையை தென் இந்திய சினிமாவிலேயே முதன் முறையாக எழுதி இயக்கி தயாரித்து தமிழ் மக்களுக்கு புது அனுபவம் தந்திருக்கும் பார்த்திபனுக்கு சல்யூட். 

மீண்டும் புதிய பாதை அமைத்திருக்கும் பார்த்திபனின் ஒத்த செருப்பை தாராளமாக தியேட்டரில் பார்த்து கைதட்டி பாராட்டலாம் 

Rating : 3.0 / 5.0