கற்பழிப்பு வழக்கில் சிக்கினால் ஆண்மை நீக்கத் தண்டனை… பரபரப்பை ஏற்படுத்தும் புது சட்டம்!!!
அண்டை நாடான பாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றச்சாட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்கத் தண்டனையை வழங்குவதற்கான கொள்கை ஒப்பந்தத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கையெழுத்து இட்டு உள்ளார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அத்தகைய வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்கு உரிய வகையில் புதுசட்டம் கொண்டுவரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அத்தகைய வழக்குகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிலர் பொது இடத்தில் குற்றவாளிகளைத் தூக்கிட்டு கொல்லாம் என்றுகூட அரசுக்கு ஆலோசனை வழங்கி வந்தனர். இந்நிலையில் கற்பழிப்பு குற்ற வழக்கில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்கத் தண்டனையை உறுதி செய்யும் கொள்கை ஒப்பந்தத்தில் அந்நாட்டு பிரதமர் கையொப்பம் செய்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு உரிய அவசர சட்ட வரைவை அமைச்சரவையில் தாக்கல் செய்தபோது இந்த கடுமையான தண்டனை குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாக வில்லை.
மேலும் புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள அவசரச் சட்ட வரைவில் காவல் துறையில் பெண்களை அதிக அளவில் சேர்ப்பது, கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பது, சாட்சிகள் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் கொண்டு வரப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆளுங்கட்சியைச் சார்ந்த சென்டர் பைசல் ஜாவத் கான் ஆண்மை நீக்க தண்டனை ஒரு தொடக்கமாக இருக்கும் என்றும், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என்றும் கூறி உள்ளார்.