நேற்று பிச்சைக்காரி… இன்று வழக்கறிஞர்.. நாளை நீதிபதி… அசத்தும் திருநங்கை!!!
பாகிஸ்தான் நாட்டில் திருநங்கை ஒருவர் கடுமையான உழைப்பினால் வழக்கறிஞரான பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய கடந்த காலத்தில் சாலை ஓரங்களில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தியதாகவும் இன்று வழக்கறிஞராக முன்னேறி இருக்கிறேன், நாளை ஒரு நீதிபதியாக மாறுவேன் எனவும் நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்து இருக்கிறார். இவரது கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
பெண்கள் படிக்கவும், சமமாக மதிக்கப்படவும், ஏன் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் கூட உரிமை பெறாத பாகிஸ்தான் நாட்டில் ஒரு திருநங்கையான நிஷா ராவ்(28) தற்போது கராச்சி மாநிலத்தில் உள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பணியாற்றுவதற்கு உரிமம் பெற்று இருக்கிறார். இந்த அந்தஸ்து தனக்கு எளிதாக கிடைத்து விடவில்லை என்பதையும் அவர் பதிவு செய்து இருக்கிறார்.
திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 2018 ஆம் அண்டில்தான் பாகிஸ்தானில் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னதாக நிஷா லாகூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து தனது கடின உழைப்பினால் சட்டப் படிப்பையும் முடித்து இருக்கிறார். மேலும் “எனது குறிக்கோள், எனது நோக்கம், எனது கனவு எல்லாமே பாகிஸ்தானில் முதல் திருநங்கை நீதிபதியாக வேண்டும் என்பதுதான்” என்றும் நிஷா ராவ் மகிழ்ச்சி பொங்க தெரிவித்து இருக்கிறார். நிஷாவிடம் இருக்கும் நம்பிக்கை பலருக்கு உற்சாகத்தை அளிக்கும் விதமாக இருக்கிறது.