Download App

Pattas Review

'பட்டாஸ்’ திரைவிமர்சனம் - தனுஷின் ஆயிரம்வாலா பட்டாஸ்

கடந்த ஆண்டு தனுஷ் நடித்த ‘அசுரன்’ மற்றும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்கள் வெளிவந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் தனுஷ் படமான ‘பட்டாஸ்’ திரைப்படம் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம். இரட்டை வேடம், அழிந்து போன தற்காப்புக்கலையை மீட்பது, பழிவாங்கும் கதை என விளம்பரம் செய்யப்படிதான் படம் உள்ளதா? என்பதை பார்ப்போம்.

கொலை குற்றம் ஒன்றுக்காக சிறைக்கு சென்ற கன்னியாகுமரி (சினேகா), தண்டனை முடிந்தவுடன் விடுதலையாகி சென்னை செல்கிறார். அங்கு பாக்ஸிங் பயிற்சி பள்ளி நடத்தி வரும் நிலன் என்பவரை கொல்வதுதான் சினேகாவின் இலக்கு. இந்த நிலையில் சின்னச்சின்ன திருட்டுக்கள் செய்து கொண்டிருக்கும் பட்டாஸ் (தனுஷ்), சினேகாவை தற்செயலாக சந்திக்கின்றார். அப்போது அவர் தான் தனது தாயார் என்றும் தனது தந்தை திரவியம் பெருமாள் என்றும், தந்தையை நிலன் தான் கொலை செய்திருக்கின்றார் என்றும் அறிகிறார். அதன்பின் அம்மாவின் பழிவாங்கும் வேலையை தனது கையில் எடுத்து கொண்டு வில்லனை எப்படி தனுஷ் பழி வாங்குகிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

தனுஷ் ஒரு சுறுசுறுப்பான வாலிபன் கேரக்டரில் நடிப்பது இதுவொன்றும் புதியது அல்ல. படிக்காதவன், பொல்லாதவன் படத்தை போலவே இந்த படத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக ஒரு வாலிப பருவத்திற்கே உரிய சேட்டைகளுடன் நடித்துள்ளார். அதேபோல் தந்தை கேரக்டரான திரவியம்பெருமாள் கேரக்டரின் மூலம் அழிந்துபோன, மறந்து போன தற்காப்புக்கலையான அடிமுறை என்ற கலையின் மகத்துவத்தை புரிய வைக்கின்றார். இந்த படம் பார்த்த பலர் இந்த கலையை கற்றுக்கொள்ள முன்வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பழிவாங்கும் பெண்ணாக அறிமுகமாகும் சினேகாவுக்கு இந்த படம் உண்மையான ரீஎண்ட்ரி என்று கூறலாம். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது கேரக்டரை மெருகேற்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான வில்லன் வேடத்தை தான் நவீன் சந்திரா செய்துள்ளார். அதேபோல் மெஹ்ரின் பிரிஜ்தா இந்த படத்தின் இன்னொரு நாயகி என்பதை தவிர இவருடைய கேரக்டருக்கு பெரிதாக எதுவும் ஸ்கோப் இல்லை. நாசர், முனிஷ்காந்த் ஆகியோர் தங்கள் பங்கை சரியாக செய்துள்ளனர்.

முதல் பாதியில் சினேகாவின் புதிரான அறிமுகம், தனுஷின் அட்டகாசமான கமர்ஷியல் காட்சிகள், ஆட்டம், பாட்டம் என தொடங்கி இடைவேளையின் போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி படம் பார்ப்பவர்களை நிமிர வைக்கின்றது. இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக், வில்லனை பழிவாங்க மகனை தயார்படுத்தும் தாய், இறுதியில் பாக்ஸிங் கலையை அடிமுறை கலை எப்படி வென்றது என்பதுடன் படம் முடிகிறது. ஒருசில காட்சிகள் ‘மெர்சல்’ படத்தை ஞாபகப்படுத்துவதையும் தவிர்க்க முடியவில்லை.

இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இசையில் ‘சில்புரோ, பிரியாதே’ ஆகிய பாடல்கள் சூப்பர். படமாக்கப்பட்ட விதமும் கண்ணுக்கு குளிரிச்சி. தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்தும் அட்டகாசமான பின்னணி இசை. மொத்தத்தில் இசையமைப்பாளர்கள் தங்கள் பணியை சரியாக செய்துவிட்டனர். ஆக்சன் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் பிரகாஷின் பணி ஆச்சரியப்பட வைக்கின்றது. அதேபோல் படம் முழுவதும் வண்ணமயமாக இருப்பது ஒரு திருவிழா கால படத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. முதல் பாதியில் மெஹ்ரின் காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை குறைப்பதை எடிட்டர் பிரகாஷ் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

‘கொடி’ படத்தின் அண்ணன் தம்பி என இரண்டு கேரக்டர்களில் தனுஷை நடிக்க வைத்த இயக்குனர் துரை செந்தில்குமார், இந்த படத்தில் அப்பா, மகன் என நடிக்க வைத்துள்ளார். அப்பாவை கொன்ற வில்லனை பழிவாங்கும் மகன் என வழக்கமான கதையாக இருந்தாலும் திரைக்கதையில் ‘அடிமுறை’ என்ற கலையை சரியாக இணைத்து படத்தை வேறுபடுத்தி காட்டியிருப்பது இயக்குனரின் திறமை எனலாம். முதல் பாதியில் மகன் தனுஷ் செய்யும் காமெடி கலந்த காட்சிகள் ஒரு பொழுதுபோக்கு படத்திற்கான அம்சம் என்றால், இரண்டாம் பாதியில் திரவியம்பெருமாள் என்ற கேரக்டரின் மூலம் தனுஷ் தனது நடிப்புத்திறமையை மீண்டும் நிருபித்துள்ளார். தனுஷ் ரசிகர்களுக்கான மாஸ் காட்சிகள் அதிகம் இருந்தாலும் ஏற்கனவே பார்த்த காட்சிகள் போல் இருப்பதால் தனுஷ் ரசிகர்கள் மட்டுமே அதனை ரசிக்கலாம். மேலும் எளிதில் ஊகிக்கும் வகையான காட்சிகள் இருப்பதும் சற்று பின்னடைவே. அடிமுறை கலையை தவிர இயக்குனரின் வழக்கமான பாணியில் எந்தவித புதுமையும் இல்லை. இருப்பினும் தனுஷ் மற்றும் சினேகா படத்தை கடைசி வரை போரடிக்காமல் கொண்டு சென்றுள்ளனர். மொத்தத்தில் மெர்சல் மற்றும் சிலம்பாட்டம் படங்களின் துரை செந்தில்குமார் வெர்ஷன் தான் இந்த பட்டாஸ்.

மொத்ததில் தனுஷ் ரசிகர்களுக்கான தீபாவளிதான் இந்த ‘பட்டாஸ்’.

Rating : 2.5 / 5.0