மீனவர்களுக்கு கண்ணீருடன் நன்றி சொன்ன கேரள மக்கள்

  • IndiaGlitz, [Tuesday,August 21 2018]

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியது. கேரளாவில் மீட்புப்பணி செய்ய ராணுவம், மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மீட்புப்பணி வீரர்கள் பெரும் உதவி செய்தபோதிலும் மீட்புப்பணியில் மீனவர்களின் பங்கு மகத்தானது.

மீனவர்கள் தங்களுடைய படகுகளை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தங்கள் உயிரை பணயம் வைத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பொதுமக்களை வெள்ள அபாயத்தில் இருந்து மீட்டெடுத்தனர். அவர்களுடைய இந்த உதவிக்கு எத்தனை கோடி நன்றி கூறினாலும் அது போதாது.

இந்த நிலையில் மீட்புப்பணிகள் முடிந்து இன்று செங்கானூர் என்ற பகுதியில் இருந்து மீனவர்கள் தங்கள் படகுகளை லாரியில் எடுத்து கொண்டு பொதுமக்களிடம் விடைபெற்று சென்றனர். அப்போது அந்த பகுதி பொதுமக்கள் கண்ணீருடன் நன்றி கூறி அவர்களை வழியனுப்பி வைத்தனர். இதில் ஒருசிலர் கடவுளை கும்பிடுவதை போல காலணியை கழட்டிவைத்து வெறுங்காலுடன் நின்று மீனவர்களுக்கு நன்றி சொன்ன விதம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் கலிகாலமாக இருந்தாலும் இன்னும் மனிதர்களிடையே மனிதத்தன்மை மிஞ்சியுள்ளது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் தேவையில்லை