பணிந்தது பெப்சி: உருளைக்கிழங்கு வழக்கை வாபஸ் பெற முடிவு!

  • IndiaGlitz, [Friday,May 03 2019]

9 விவசாயிகளிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்த அமெரிக்காவை சேர்ந்த பெப்சி நிறுவனம் அந்த வழக்கை வாபஸ் பெற ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பெப்சி நிறுவனத்தின் லேஸ் தயாரிப்புக்காக கடந்த 2009ஆம் ஆண்டு எப்.எல். 2027 எனப்படும் புதுவகை உருளைக்கிழங்கை கண்டறிந்து, அதற்கு காப்புரிமையும் பெற்றது. ஆனால் இதனை அறியாத குஜராத்தை சேர்ந்த 9 விவசாயிகள் அதே வகை உருளைக்கிழங்கை பயிரிட்டதால், அவர்கள் மீது தலா ரூ.1 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று பெப்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

தங்கள் வாழ்நாளில் ஒரு கோடி ரூபாயை கண்ணால் கூட பார்த்திராத அந்த விவசாயிகள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய சங்கங்களும் போராட்டக்களத்தில் இறங்கியது. ஒரு கட்டத்தில் குஜராத் அரசும் விவசாயிகள் பக்கம் நின்றது. மேலும் விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்த பெப்சி நிறுவனத்தின் அனைத்து பொருட்களையும் வாங்குவதை தவிர்ப்போம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து நிலைமை விபரீதமாவதை அறிந்த பெப்சி இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தது. பேச்சுவார்த்தையின்போது விவசாயிகள் மீது பதிவு செய்த வழக்குகளை வாபஸ் பெற பெப்சி நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த திருப்பம் சாதாரண விவசாயிகளுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.