குடும்ப அடல்ட் காமெடிக்கு ஆறுதல் தருகிறார் இந்த 'பெருசு'.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ் அவரது அண்ணன் சுனில், ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், விடிவி கணேஷ், கருணாகரன், முனீஸ்காந்த், தீபா சங்கர் சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பெருசு.
சாமிக்கண்ணு (சுனில்), துரை (வைபவ்) இருவரும் ஊரில் நல்ல மரியாதையுடன் இருக்கும் ஆலஸ்யம் (எ) பெருசு மகன்கள். ஊருக்குள் பந்தாவாக சுற்றித் திரியும் பெருசு திடீரென இறந்து விடுகிறார். அவர் இறப்பில் தான் சொல்ல முடியாத ஒரு சங்கடம் உண்டாகிறது. மொத்தக் குடும்பமும் அதை சரி செய்து பெரியவரை நல்லடக்கம் செய்ய வேண்டும் என தவிக்கிறது. அது என்ன பிரச்னை, மகன்கள் மற்றும் குடும்பம் இணைந்து பெரியவருக்கு சகல மரியாதையுடன் அடக்கம் செய்தார்களா இல்லையா? என்பது மீதிக் கதை.
கதையின் மிகப்பெரிய பலம் சுனில் தான். மனிதர் வீட்டுக்கு மூத்த அண்ணன் , அவர் மட்டுமே ஒரே சம்பாத்தியம் என்கிற நிலையில் மொத்த சுமையும் அவர் தலையில் விழ, அதற்கு ஏற்ப பக்குவமான நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாக அப்பாவிடம் தான் பேசியிருக்கலாம் என வருத்தப்படும் காட்சிகள் நிச்சயம் தற்சமயம் சண்டையில் இருக்கும் மகன்களையும் கூட மாற்றிவிடும். இதற்கிடையில் காமெடி கலாய்களிலும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். வைபவ் எந்நேரமும் குடி, உளறல் என சுற்றித் தெரியும் பொறுப்பற்ற ஊதாரி. அந்தக் கேரக்டரை மிக அற்புதமாக உள்வாங்கி நடித்திருக்கிறார். ஆனால் இத்தனை படங்கள் நடித்தப் பிறகும் தன் அண்ணனை விட ஒரு புள்ளியாவது ஓவர் டேக் செய்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கலாம்.குறிப்பாக முதல் பாதியில் கதைக்குள் வருவதற்கே வைபவ் தடுமாறுகிறார். ரெடின் கிங்ஸ்லி , கருணாகரன், பால சரவணன், முனிஸ் காந்த், தீபா அக்கா, & கோவின் காமெடி டிராக் படத்தை முகம் சுளிக்கும் ஆபாச எல்லைக்குள் போகவிடாமல் தாங்கிப் பிடித்திருக்கிறது. நிஹாரிகா தமிழுக்கு நல்வரவு, பல நேரங்களில் கேமராவை பார்த்து விடுகிறார், முதல் படம் என்பதால் அடுத்தடுத்த படங்களில் மேலும் பக்குவப்பட்ட நடிப்பை கொடுப்பார் என நம்புவோம். சாந்தினி பெரிதாக வேலை இல்லை என்றாலும் ஆங்காங்கே மூத்த மருமகள் கௌரவம், சொத்து சண்டையில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.
இறுதி காட்சியில் தனம் மற்றும் சுபத்ரா சண்டையிடும் காட்சிகள் கிராமத்துப் பெண்களின் இயல்பியலில் நம்மை ரசிக்க வைக்கிறது.
ஃபேமிலி அடல்ட் காமெடி - இதற்கு நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் ஒரு இயக்குனர் சரியான நியாயம் செய்திருக்கிறார். பாராட்டுகள் இளங்கோ ராம். ஏனெனில் பெரும்பாலும் குடும்ப அடல்ட் காமெடிகள் குடும்பமாக உட்கார்ந்து பார்க்க முடியும் ஆனால் குழந்தைகளுடன் பார்க்க முடியாது. அதைத்தான் அக்காலத்தில் பாக்கியராஜ் மற்றும் பாலச்சந்தர் உள்ளிட்டோர் மிக அற்புதமாக கொடுத்திருந்தார்கள். அந்த லெவலுக்கான கதை இல்லையென்றாலும் இந்தப் படம் ஓரளவு ஃபேமிலி அடல்ட் காமெடி டாக்கை பூர்த்தி செய்து இருக்கிறது.
ஒரு வீட்டுக்குள் நிகழும் கதைக்களம், குறிப்பாக வீடு முழுக்க கூட்டம் மற்றும் நிறைய கதாபாத்திரங்கள், நிறைய கோணங்கள் , ஏராளமான உணர்வுகள், அத்தனைக்கும் ஈடு கொடுத்து அற்புதமான ஒளிப்பதிவை வழங்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யா திலகம். அதற்கேற்ப சூரிய குமரகுரு படத்தொகுப்பு மிகக்கச்சிதம். திடீரென தாவும் சோகம் , திடீரென வரும் காமெடி இவற்றிற்கிடையே சில இடங்களில் தடுமாறி இருக்கிறார். அருண் ராஜின் பின்னணி இசை கதைக்குத் தேவையான சோகம், காமெடி, கலாய் என மிகச் சரியாக உணர்வுகளைக் கடத்தியிருக்கிறது.
ரெண்டு பொண்டாட்டி, பெண் ஆசைப் பிடித்த பெருசு , இதையெல்லாம் ஆண்மையின் வலிமையாக மாஸ் என பேசும் வசனங்களைக் குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் குடும்ப அடல்ட் டிராமா கதைகள் தமிழில் சமீபகாலமாகவே இல்லாத சூழலுக்கு ஆறுதலாக மாறி இருக்கிறது ' பெருசு ' . இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் வலிமை சேர்த்திருந்தால் பெரிய கொண்டாட்டத்தை சந்தித்திருக்கும்.
Comments