close
Choose your channels

Petta Review

Review by IndiaGlitz [ Saturday, January 12, 2019 • தமிழ் ]
Petta Review
Banner:
SUN PICTURES
Cast:
Rajinikanth, Vijay Sethupathi, Nawazuddin Siddique, Bobby Simha, Sananth, Simran, Trisha, Megha Akash
Direction:
Karthik Subbaraj
Production:
Kalanithi Maran
Music:
Anirudh Ravichander

பேட்ட விமர்சனம்- தரமான ரஜினி சம்பவம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் நெடிய திரைப் பயணத்தில் திரைத் துறையின் மேதைகளான இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளார். இன்றைய இளம் தலைமுறை இயக்குநர்களில் பா.ரஞ்சித்துடன் அடுத்தடுத்து இரண்டு படங்கள் கொடுத்துவிட்டு இப்போது கார்த்திக் சுப்பாராஜுடன் இணைந்து ‘பேட்ட’ படத்தைக் கொடுத்திருக்கிறார். இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ். ரஜினிகாந்த் 80களில் வெளிப்படுத்திய மாஸ் அவதாரத்தை மீட்டுக்கொண்டுவந்துள்ளதாக மிகப் பெரிய வாக்குறுதியை அளித்திருந்தார். அந்த சத்தியத்தை நிறைவேற்றிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ரஜினி ரசிகர்களும் பொதுவான சினிமா ரசிகர்களும் என்றென்றும் மறக்க முடியாத அளவில் தன் ‘தலைவரை’க் கொண்டாடி அதன் மூலம் ஒரு மாபெரும் விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ். 

காளி (ரஜினிகாந்த்) ஒரு ஹாஸ்டலில் வார்டனாக நுழைகிறார். அங்கு நடக்கும் தவறுகள் ஒவ்வொன்றையும் சரி செய்கிறார். இளம் காதல் ஜோடிகளான அன்வர் (சனந்த்) மற்றும் மேகா ஆகஷை இணைத்து வைக்கும் மன்மதனாக இருக்கிறார். அதோடு மேகாவின் தாயான சிம்ரனைக் காதலிக்கத் தொடங்குகிறார். அந்தக் கல்லூரியில் சண்டித்தனம் செய்துகொண்டு திரியும் மைக் (பாபி சிம்ஹா), சனந்த்-மேகா ஜோடியைத் துன்புறுத்துகிறான். அவர்களை அவனிடமிருந்து காப்பாற்றும் காளியின் முயற்சி அவருக்கு ஒரு வடக்கத்திய ஜாதித் தலைவர் சிங்கார் (நவாசுதீன் சித்திக்) மற்றும் அவரது மகன் ஜித்து (விஜய் சேதுபதி) ஆகியோரின் எதிர்ப்பைப் பெற்றுத் தருகிறது. காளி யார்? அவருக்கும் இந்த வடக்கத்திய வில்லன்களுக்கும் ஆன முன்கதை என்ன? காதலர்களைக் காப்பாற்றும் பயணத்தில் காளி என்ன செய்கிறார் அவருக்கு என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் ‘பேட்ட’ படத்தின் மீதிக் கதை. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் உலக சினிமாவிலும் மிகப் பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக நீண்ட காலம் நீடிப்பது ஏன் என்ற கேள்விக்கு இந்தப் படத்தின் மூலம் பதில் சொல்லியிருக்கிறார். மர்மம் மிக்க ஹாஸ்டல் வார்டனாக ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஆதிக்கம் செலுத்தும் ரஜினி. ஆக்‌ஷன், காமடி, ஸ்டைல், ரொமான்ஸ் என்று அனைத்தையும் அள்ளிக்கொடுத்து  ரசிக்க வைக்கிறார். ஒட்டுமொத்த படத்தையும் தன் தோள்களில் சுமக்கிறார் என்று சொன்னால் மிகையில்லை. சண்டைக் காட்சிகளில் ரஜினியின் உழைப்பு பளிச்சிடுகிறது. குறிப்பாக அந்த நீண்ட இடைவேளைச் சண்டைக் காட்சியிலும் அதற்கு இணையான கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியிலும் ’இவருக்கு வயசே ஆகல’ என்று பார்வையாளர்களை பிரமிக்க வைத்திருக்கிறார். அதே போல் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் பேட்ட கதாபாத்திரத்தில் அதகளம் செய்திருக்கிறார். சிம்ரன் வரும் ஓரிரு காட்சிகளில் சொக்க வைக்கும் அழகுடன் தோன்றுகிறார். திரிஷா ரஜினியின் மனைவியாக ஒரு சில காட்சிகளில் வந்துபோகிறார்.. சசிகுமார் கதாபாத்திரமும் ஃப்ளேஷ் பேக் காட்சிகளும் திரைக்கதையில் முக்கியப் பங்குவகிக்கின்றன. ஒரு வில்லனாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கும் நவாஸுதீன் சித்திக் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக ஒரு படுகொலையைச் செய்துவிட்டு மெய்மறந்து ஆட்டம்போடும் காட்சியில் அவர் ஏன் இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார் என்பதை உணர முடிகிறது. விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தையோ நடிப்பையோ பற்றி விவரிப்பது சில ரகசியங்களை உடைப்பதுபோல் ஆகிவிடும் என்பதால் அவற்றைச் சொல்லாமல் தவர்க்கிறோம். ஆனால் அவருக்கும் ரஜினிக்கும் இடையிலான காட்சிகள் எதிர்ப்புகளும் எமோஷன்களும் நிரம்பியவை. அதனாலேயே முக்கியத்துவம் பெறுகின்றன. பாபி சிம்ஹா, சனந்த், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், நரேன் உள்ளிட்ட மற்ற துணை நடிகர்கள் தங்கள் பங்கை குறையின்றிச் செய்திருக்கிறார்கள். 

ரஜினியை மசாலாப் படங்களின் மகாராஜாவாக மறுவருகை புரியவைத்திருப்பதே ‘பேட்ட’ படத்தின் மிகப் பெரிய சாதனை. அதனாலேயே இந்தப் படத்தை ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடுவார்கள். 80களின் மாஸ் ரஜினியை இந்தத் தலைமுறை ரசிகர்கள் முதல் முறையாக தியேட்டரில் பார்த்த உணர்வைப் படம் கொடுக்கிறது. அதே நேரம் ஸ்டைலிஷாகவும் சுவாரஸ்யமாகவும் கதை சொல்லியிருப்பது ஒரு படமாகப் பொது ரசிகர்களையும் திருப்திபடுத்த உதவுகிறது.

கதை அரதப்பழசாக இருப்பதும் லாஜிக் ஓட்டைகளும் கதாநாயகனைத் தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொள்வதும் படத்தின் குறைகள். இரண்டாம் பாதியில் திரைக்கதை தொய்வடையும் தருணங்கள் இருக்கின்றன. கிளைமேக்ஸை நோக்கிய பயணத்தில் படம் மீண்டும் சூடுபிடிக்கிறது.  

 

அநிருத்தின் பாடல்கள் கொண்டாட்ட மனநிலையைத் தருகின்றன. பின்னணி இசை காட்சிகளின் புதுமைக்கும் பளபளப்புக்கு பொருத்தமாக இருக்கின்றன. திருவின் ஒளிப்பதிவும் விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பும் சிறப்பாக உள்ளன. படத்தைத் தயாரித்திருக்கும் சன் பிக்சர்ஸுக்கு இது ஒரு மறக்க முடியாத வெற்றிப் படமாக அமையக்கூடும். கார்த்திக் சுப்பராஜ் என்ற ’தலைவர்’ ரஜினி வெறியர் அந்த மாபெரும் சூப்பர் ஸ்டார் மீதான தனது காதலைக் கொட்டி இந்தப் படத்தை இழைத்துள்ளார். ஒவ்வொரு மாஸ் காட்சியும் அதகளம். மேலும் அவர் தன் அரசியல் பார்வையை ஒரு மாஸ் படத்தில் அழகாகப் பொருத்தியிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள இளம் தலைமுறைப் படைப்பாளியாகக் கலாச்சாரக் காவலர்களை கண்டித்துள்ளார். அதற்காகவும் அவரைப் பாராட்ட வேண்டும்.

 

மொத்தத்தில் ஒரு அதகளமான தலைவர் படத்தை கொடுத்து கார்த்திக் சுப்பாராஜ் நம் அனைவரையும் ரஜினமயமாக்கிவிட்டார். தியேட்டரில் இந்த ரஜினி திருவிழாவைத் தவறவிட்டுவிடாதீர்கள்.

 

Rating: 3.75 / 5.0

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE