Download App

Ponniyin Selvan - PS 1 Review

பொன்னியின் செல்வன் : அனைவரையும் திருப்தி செய்த மணிரத்னம் மேஜிக்!

அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை படிக்காத வாசகர்கள் மிகவும் குறைவு என்பதும் அந்த நாவலை படித்தவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்பது வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும் என்பதும் தெரிந்ததே.'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக இயக்குவது என்பது ஒரு மிகப்பெரிய சவால் என்பதும், வாசகர்கள் 'பொன்னியின் செல்வன்' நாவலை ரசித்து படித்த அளவுக்கு திரையில் காட்சியாக கொண்டு வருவது சாதாரண விஷயம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

இருப்பினும் மணிரத்னம் இதனை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை இயக்கி உள்ள நிலையில் அந்தத் திரைப்படம் பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் திருப்தியை ஏற்படுத்தியதா? என்பதை தற்போது பார்ப்போம்.

ஆதித்த கரிகாலன் ராஷ்டிரகூடர் போரில் எதிரிகளை துவம்சம் செய்யும் போர் காட்சியுடன் படம் தொடங்குகிறது. போர் முடிந்தவுடன் வந்தியத்தேவனை கடம்பூர் மாளிகையில் சோழர்களுக்கு எதிராக சதி நடப்பதாகவும் அந்த சதி என்ன என்பதை அறிந்து சுந்தர சோழர் மற்றும் குந்தவையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வந்தியத்தேவனுக்கு கரிகாலன் உத்தரவு பிறப்பிக்கிறார். அந்த உத்தரவு பெற்றுக் கொண்டு அவருடைய வாளையும் பெற்றுக்கொண்ட வந்தியதேவன் கடம்பூர் நோக்கி செல்லும்போது எதிர்பாராதவிதமாக நந்தினியை சந்திக்கிறார். அவர் கொடுத்த ஒரு உத்தரவையும் பெற்றுக்கொண்டு சுந்தர சோழரையும் குந்தவையையும் சந்திக்கும் வந்தியதேவன், குந்தவையின் ஓலையை எடுத்துக்கொண்டு அருள்மொழிவர்மனை சந்திப்பதற்காக இலங்கை செல்கிறார்.

அதே நேரத்தில் அருள்மொழிவர்மன் கொலை செய்ததற்காக வீரபாண்டியன் ஆட்களும் இலங்கை செல்கின்றனர். மேலும் கரிகாலன் மற்றும் அருள்மொழிவர்மன் ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் தஞ்சைக்கு வரவழைக்க வேண்டும் என்ற பெரிய பழுவேட்டரையர் யோசனையை ஏற்றுக்கொண்ட சுந்தரசோழர் இலங்கையில் இருக்கும் பொன்னியின் செல்வனை சிறைபிடித்து வர ஒரு படையை அனுப்புகின்றார். பொன்னியின் செல்வனை சிறைப்பிடிக்க செல்லும் படை, பொன்னியின் செல்வனை கொலை செய்யப் போகும் வீரபாண்டியன் கூட்டம், இதற்கிடையே பொன்னியின் செல்வனுக்கு ஓலையை கொடுக்கச் செல்லும் வந்தியதேவன் ஆகிய மூவருக்கும் என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் மீதிக்கதை

'பொன்னியின் செல்வன்' நாவலில் உள்ள கேரக்டர்களை உயிரோட்டமாக திரையில் கொண்டு வருவது என்பது கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுமே ஒரு சவாலான விஷயம்தான். இதில் அதிக வெற்றி பெறுபவர் நந்தினி கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா ராய் என்று கூறலாம். நந்தினியின் அரசியல் சதி, அழகு, அறிவு என்று மொத்த உருவத்தையும் நாம் எப்படி கற்பனை செய்து வைத்திருந்தோமோ, அதை அப்படியே திரையில் கொண்டு வருகிறார். அவருடைய கண்களே பல பக்கங்கள் வசனம் பேசுகிறது. குறிப்பாக குந்தவை உடனான நேருக்கு நேர் சந்திப்பு படத்தின் ஹைலைட் காட்சியாகும். கணையாழியை ஏன் கொடுத்தாய் என ஆத்திரமாக கேட்கும் பெரிய பழுவேட்டயரை ஒரே வார்த்தையில் மடக்குவது, வந்தியத்தேவனை தனக்கு சாதகமாக பயன்படுத்துவது, வீரபாண்டியனின் உயிருக்காக கரிகாலனின் காலில் விழுந்து கெஞ்சுவது என நந்தினியாகவே வாழ்ந்துள்ளார் ஐஸ்வர்யாராய்.

அடுத்ததாக கரிகாலன் ஆகவே விக்ரம் வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையல்ல. தன்னுடைய காலில் விழுந்து வீரபாண்டியனின் உயிருக்காக கெஞ்சும் நந்தினியை பேச்சை கூட கேட்காமல் வீரபாண்டியனின் தலையை வெட்டி வீழ்த்துவது, தன்னை காதலித்தவள் எப்படி வீரபாண்டியனுடனும், கிழவரையும் மணந்து இருப்பாள் என புலம்புவது, குந்தவையுடன் தஞ்சைக்கு வரமாட்டேன் என்ற காரணத்தை கூறுவது என விக்ரம் புகுந்து விளையாடியுள்ளார்.

குந்தவை கேரக்டரில் நடித்திருக்கும் த்ரிஷாவுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் வரும் காட்சிகளில் மிகவும் அசத்தலாக நடித்திருக்கிறார். குறிப்பாக வந்தியதேவன் உடனான அவரது நக்கலான ரொமான்ஸ் வசனங்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக உள்ளது.

கிட்டத்தட்ட பாதி படத்திற்கு மேல் வரும் ’பொன்னியின் செல்வன் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவி தனது கேரக்டரை முழுமையாக உணர்ந்து டைட்டில் கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கின்றார்.

மேலும் சுந்தரசோழர் கேரக்டரில் நடித்த பிரகாஷ்ராஜ், பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் நடித்த சரத்குமார், சின்ன பழுவேட்டரையர் கேரக்டரில் நடித்த பார்த்திபன், பூங்குழலி கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர்கர்களும் சிறப்பாக செய்துள்ளனர்.

'பொன்னியின் செல்வன்' ஐந்து பாகங்கள் நாவலை இரண்டு பாகங்களாக சுருக்கி திரைக்கதை அமைக்கும்போது பல காட்சிகளை ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் படத்தின் முதல் பாகத்தில் பொன்னியின் செல்வன் நாவலின் ஹைலைட்டை மட்டுமே பார்த்தது போல் உள்ளது. தேவையில்லாத மூன்று பாடல்களுக்கு பதில் படத்தில் இன்னும் அதிக காட்சிகளை இயக்குனர் மணிரத்னம் வைத்திருக்கலாம். குறிப்பாக நாவலில் வானதியை கல்கி அந்த அளவுக்கு வர்ணித்திருப்பார். ஆனால் படத்தில் வானதிக்கு ஓரிரு காட்சிகளே உள்ளன. இருப்பினும் நாவலின் முக்கிய காட்சிகளை திரையில் கொண்டு வர மணிரத்னம் எந்த அளவுக்கு உழைத்திருக்கின்றார் என்பது ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. முதல் பாதி திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி ஜெட் வேகத்தில் இருப்பது படத்தின் பலமாக பார்க்கப்படுகிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் சூப்பர் என்றாலும் இந்த படத்திற்கு பாடல்கள் தேவையா? என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் பின்னனி இசையில் அசத்தியுள்ளார்.

ரவி வர்மனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங், தோட்டாதரணியின் கலை ஆகியவற்றை புகழ் தமிழில் இனிமேல் தான் வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டும்.

மொத்தத்தில் இந்த படம் 'பொன்னியின் செல்வன்' நாவலை படித்தவர்களுக்கு முழு திருப்தியை அளிக்காது என்றாலும் படம் பார்க்க வந்தவர்களை தனது திரைக்கதையால் மணிரத்னம் கட்டிப்போட்டு அசத்தியுள்ளார்.

'பொன்னியின் செல்வன்' பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய காவியம்

Rating : 3.5 / 5.0