Download App

Por Thozhil Review

போர் தொழில் விமர்சனம் - புத்திசாலித்தனமாக பின்னப்பட்டு அசத்தும்  சைக்கோ த்ரில்லர்.

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் சைக்கோ த்ரில்லர்கள் பார்வையாளர்களை இரண்டு மணி நேரம் ஸீட்டின் நுனியில் உட்க்கார வைத்தாலே போதுமென பெரும்பாலாக கருதுவது வழக்கம்.  அத்தி பூத்தாற்போல சமீபத்தில் வந்த   "ராட்சசன்" போன்ற படங்கள்  அதை தாண்டிய ஒரு ஆழமான உளவியலையும் கொலையாளியும் சமுதாயத்தால் தான் உருவாக்கப்படுகின்றனர்  என்ற உண்மையையும் உரைத்தன.  நீண்ட நாட்களுக்குப் பிறகு 'போர் தொழில்' புத்திசாலிதமான திரைக்கதையுடன், சிறந்த நடிப்பையும் மேக்கிங்கையும் தாண்டி ஒரு முக்கியமான செய்தியையும் பார்வையாளர்களுக்கு அளித்து சபாஷ் சொல்ல வைத்திருக்கிறது.

திருச்சியில் ஒரு சைக்கோ கொள்ளைக்காரன் இளம் பெண்களை ஒரே மாதிரி கைகளையும் தலையையும் ஒன்றாக கட்டி இறுக்கி கழுத்தறுத்து கொலை செய்கிறான். சாந்தகுணமுள்ள பயிற்சி காவல் அதிகாரி பிரகாஷ் (அசோக் செல்வன்) கொஞ்சம் பயந்த சுபாவமும் கொண்டவர்  அந்த வழக்கை விசாரிக்கும் அனுபவமிக்க உயர் அதிகாரி லோகநாதனுக்கு (சரத்குமார்) உதவியாக செல்கிறார்.  கூடவே வீனா (நிகிலா விமல் ) தொழில் நுட்ப உதவையாளராக பயணிக்கிறார்.  . லோகநாதன் திமிர்பிடித்தவர் , யாரையும் மதிக்காத கோபக்காரர் அவரின் புத்திசாலித்தனமு அனுபவமுமே கொலையாளியை கண்டு பிடிக்க போதுமானதாக நினைக்கிறார். பிரகாஷின் புத்தக அறிவை ஒரு பொருட்டாக மதிக்காமல் அவனை பல இடங்களில் அவமானப்படுத்துகிறார் . இதற்கிடையில், இளம் பெண் சடலங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது.  சில துப்புகள் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மற்ற தீர்க்கப்படாத கொலை வழக்குகளுடன் தொடர்புடையதாக தெரிய வர கொடூர கொலைகாரனை இரண்டு போலீஸ் காரர்களும் நெருங்கி விடுகிறார்கள்.  தங்களுக்குள் இருக்கும் கருத்து  மோதல் மற்றும் சாட்சிகள் எதுவும் இல்லாமல் அதி புத்திசாலியான அந்த  சைக்கோ கொலையாளியைப் பிடிக்க முடிந்ததா இல்லையா  என்பதுதான் வேகமாக பயணிக்கிம் மீதி  திரைக்கதை.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக தனது இரண்டாவது இன்னிங்ஸில் 'காஞ்சனா' மற்றும் பெரிய பழுவேட்டையார் போன்ற சில வித்தியாசமான வேடங்களில் துணிச்சலாக முயற்சி செய்தவர் சரத்குமார். இருப்பினும் 'போர் தொழில்' லோகநாதன் அவரை முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தில் காட்டியிருக்கிறார். பிடடான உடல், கண்களில் எப்பொழுதும் கோபம் கொப்பளிக்கும் கூர்மையான பார்வை மற்றும் ஒரு கழுகு போல் கொலையாளியை திட்டமிட்டு நெருங்கும் ஆற்றல் என ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார் சரத்குமார்.    அதே நேரத்தில், அவர் தனது உடல் மற்றும் மனதில் சுமந்து கொண்டிருக்கும் வடுக்களையும் அதன் வலிகளையும் ஒரு சில காட்சிகளில் காட்டும்போது மனதை தொடுகிறார்.   அசோக் செல்வனுக்கு இது மற்றும் ஒரு மைல் கல் பாத்திரம் அதை மிக சிறப்பாக செய்து ரசிகர்களை கவர்கிறார்.   சரத்திடம் மாட்டிக்கொண்டு முழிக்கும்போதும், நிகிலாவிடம் அசடு வழியும்போதும் கடைசியில் கொலைகாரனிடம் சிக்கும்போது அவர் காட்டும் பயம் என அணைத்து இடங்களிலும் ஜொலிக்கிறார்.  நிகிலா விமலின் டெக்னிக்கல் அசோசியேட் கதாபாத்திரம் கொஞ்சம் திணிக்கப்பட்டதாக தெரிந்தாலும் இறுக்கமான கதையோட்டத்தில் அவர் வரும் காட்சிகலில் அவரது இயல்பான நடிப்பால் சற்று இளைப்பாறுதல் தருகிறார் என்பதில் சந்தேகமில்லை  சமீபத்தில் மறைந்த ஒரு பழைய ஹீரோ, ஒரு பிரமாதமான எதிர்மறை கேரக்ட்டரில் வந்து அசத்துகிறார்.   . உடல் நலம் குன்றிய நிலையிலும் அவரது அட்டகாசமான நடிப்பு அவருக்கு சிறப்பான ஒரு பிரியா விடையாக அமைந்துவிட்டது இந்த போர் தொழில் .  சீரியல் கொலையாளியாக தனது மிருகத்தனமான உடல் மொழியுடன் நடிதிருக்கும் அந்த நடிகர் ஆதி வயிற்றை கலங்க வைக்கிறார். அவரிடம் நிகிலாவும் அசோக்கும் மாட்டிக்கொள்ளும் தருணங்கள் நிஜமாகவே திக் திக் ரகம்.  ஒரு பயங்கரமான சோகத்தை எதிர்கொள்ளும் போலீஸ் டிரைவராக பிஎல் தேனப்பன் கச்சிதமாக நடித்துள்ளார்.

'போர் தோழில்'  பார்வையாளர்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், கொலையாளியைப் பிடிக்க காவல்துறையினருடன் நம்மையும்  அழைத்துச் செல்வதை போல் ஒரு உணர்வை ஏற்படுத்திவிடுவது சிறப்பு. . இளம் மனங்களை வடிவமைப்பதில் பெற்றோரின் முக்கிய பங்கை சொல்லும் அந்த கிளைமாக்ஸ்  காட்சி மட்டுமே டிக்கெட் விலைக்கு நியாயம் சேர்ப்பதாக கருதிவிடலாம்.  ஆச்சரியமான திருப்பங்களை ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விட்டு கடைசி வரை பார்வையாளர்களின் கவனத்தை கட்டிப்போட்ட விதத்திலும் படம் ஜெயிக்கிறது. 'ராட்சசன்' போலவே சைக்கோ கொலையாளிகள் இருவரின் பின்னணியும் அவர்களின் நோக்கங்களையும் சரியாக சொன்னதற்காகவும் பாராட்டலாம். . அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இருவரின் எதிர் எதிர் குணாதிசயங்களும் திருப்திகரமான முறையில் கடைசியில் நியாயம் சேர்த்திருப்பது இயக்குனரின்  திரைக்கதை ஆளுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.  மிஷ்கினின் 'சைக்கோ' போன்ற படங்கள் கொலையாளி மேல் நம்மை பரிதாபப்படவைக்க கடுமையாக முயற்சித்து தோற்றன.   ஆனால் இந்த அறிமுக இயக்குனர் தனது ஆழமான சிந்தனையாலும் தெளிவான பார்வையாலும் எளிதாக அதை செய்துவிடுகிறார்.  

மைனஸ்கள் என்று பார்த்தால்  'சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ்' படம் மற்றும்  'ஜாக் தி ரிப்பர்' , 'தி காபிகேட் கில்லர்' போன்ற பல மேற்கத்திய நிஜ வாழ்க்கை சைக்கோ கொலையாளிகளின் தாக்கம் அதிகம் தெரிகிறது. ஒரு சில திருப்பங்கள் மிகவும் வசதியாகத் தோன்றுகின்றன மற்றும் வெவ்வேறு சகாப்தக் கொலையாளிகளுக்கு இடையிலான தொடர்பு அவ்வளவு நம்பும்படியாக இல்லை .

ஆல்ஃபிரட் பிரகாஷ் மற்றும் விக்னேஷ் ராஜாவின் எழுத்து ஒவ்வொரு காட்சியிலும் வசனத்திலும் மிகவும் புத்திசாலித்தனமாக மின்னுகிறது.   ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் அருமை.  ஜேக்ஸ் பெஜோயின் பின்னணி இசை இந்த மாதிரி படங்களுக்கென்றே இருக்கும் டெம்பிளேட் ரகமாக இருப்பது ஏமாற்றம் பல இடங்களில் அது  கவனத்தை சிதறடிக்கவும் செய்கிறது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஷக்தி ஃபிலிம் ஃபேக்டரி இது போன்ற ஒரு நல்ல படைப்பை தமிழ் பார்வையாளர்களுக்கு வழங்கியதற்காக நாமும் அப்பளாஸ் தரலாம்.  விக்னேஷ் ராஜா, நிச்சயமாக இந்த ஆண்டின் மிக சிறந்த அறிமுகமாக திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை. முதல் படத்திலேயே தனி முத்திரை படைத்த அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

தீர்ப்பு: மூளைக்கு தீனி போடும்  இந்த அற்புதமான சைக்கோ த்ரில்லரைத் தவறவிடாதீர்கள்

Rating : 4.0 / 5.0