ஈபிஎஸ்-க்கு எதிராக போஸ்டர் ஒட்டிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்...!மீண்டும் துவங்கிய சர்ச்சை....!

  • IndiaGlitz, [Wednesday,June 09 2021]

ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர்களுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியது மீண்டும் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தோல்வியை சந்தித்த அதிமுக-வில் அன்றுமுதல் எதிர்க்கட்சித் தலைவர் என்ற போட்டி நிலவி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி-க்கும் , ஓ.பன்னீர் செல்வத்திற்கும் தலைவர் பதவிக்கு, கடுமையான முயற்சி எடுத்து வந்த நிலையில், இறுதியில் ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து இருவரும் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டு வந்தனர். இந்நிகழ்வு கட்சிக்குள் பூசல்கள் உள்ளது என்பதை வெளிப்படையாக காட்டியது.

இந்நிலையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில், 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்காததால், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தாலும், ஓபிஎஸ் சொந்த வேலையின் காரணமாக கூட்டத்தில் பங்கேற்கவில்லை என விளக்கம் தரப்பட்டது. இதற்கிடையில் கட்சிக்குள் மீண்டும் வருவேன், அதிமுக-வை ஒருங்கிணைப்பேன் என்று சசிகலா நடராஜன் பேசிய ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலானது. இந்நிகழ்வுகள் அதிமுக-விற்குள் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்-க்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள், போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் அச்சிடப்பட்டிருப்பதாவது,அ.தி.மு.க கட்சி செயல்பாடுகளில் அம்மாவால் அடையாளம் காணப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை கலந்து ஆலோசிக்காமல் எந்த விதமான செயல்பாடுகளோ, நடவடிக்கைகளோ செய்யாதே.. அவ்வாறு செய்ததால்தான் தேர்தலில் தோற்றுப்போனோம். இனிமேலும் தொடர்ந்தால் கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தான் இன்றைய அரசியல் களத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.