close
Choose your channels

உலக அமைதிக்கு ஒரே தீர்வு யோகாதான். ஆதியோகி சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

Saturday, February 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்துக்களின் முக்கிய புனித நாட்களில் ஒன்றான சிவராத்திரி தினமான நேற்று பாரத பிரதமர் நரேந்திரமோடி கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டிருந்த 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் அவர் பேசியதாவது:

எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும் மகாதேவர் ஒருவர்தான். அதேபோல் எத்தனையோ மந்திரங்கள் இருந்தாலும் மகா ம்ருத்யுஞ்சய என்ற ஒரே மந்திரம்தான் சிவனுக்கு உகந்தது. மேலும் எத்தனையோ விழாக்கள் இருந்தாலும் மகா என்ற எழுத்துடன் தொடங்கும்மகா சிவராத்திரிதான் மிகவும் மேன்மையான திருவிழா. இருளைப் போக்கி வெளிச்சத்தைக் கொண்டு வருவதைபோல, அநீதியை அழித்து நீதியை காக்கிறது இந்த மகாசிவராத்திரி.

பல நூறாண்டுகளாக வெவ்வேறு இடங்களில் இருந்து சக்திமிக்க ஞானிகள் வந்துள்ளனர். அவர்களது மொழிகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் தெய்வீக நோக்கம் ஒன்றே ஒன்றுதான். இங்கு 112 அடி உயர ஆதியோகி சிலையின் முன்பு நிற்கும்போது மகத்தான சக்தி நம் அனைவரையும் அரவணைப்பதை உணர முடிகிறது. தற்போது யோகா பல எல்லைகளைக் கடந்து வந்துள்ளது. யோகாவுக்காக தற்போது பல்வேறு பள்ளிகள், பயிற்று முறைகள் இருந்தாலும் யோகா என்பது நிலையானது. யோகா புராதனமானது. ஆனால் நவீனமானது. அது வளர்ந்து கொண்டே இருக்கிறது. யோகாவின் சாரம் இன்னும் மாறவே இல்லை. இந்த சாரத்தை பேணிக்காப்பது மிகவும் முக்கியம்.

சிவனை நினைக்கும்போது கயிலாய மலையும், பார்வதியை நினைத்தால் கன்னியாகுமரியும் ஞாபகம் வரும். எனவே, சிவசக்தி சங்கமம் என்பது மலைகள் மற்றும் கடல்களின் சங்கமமாக அமைந்துள்ளது. இதுதான் நம் நாட்டின் ஒற்றுமையைப் பறைசாற்றுகிறது. சிவன் குடும்பமே வேற்றுமையில் ஒற்றுமை என்ற மரபைக் காட்டுகிறது. கடவுள்கள் அனைவரும் விலங்கு, பறவை, மரத்துடன் இணைந்துள்ளனர். கடவுளை வணங்கும்போது அவற்றையும் வணங்குகிறோம். அதனால்தான் ஒருமை உணர்வு, கனிவு, சகோதரத் துவத்துடன் வாழ்கிறோம். இந்தப் பண்பாட்டுடன்தான் நமது முன்னோர்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர்.

இந்த தேசத்தில் பெண்மைக்கு முக்கியத்துவம் தருவது பாராட்டுக்குரியது. பல இறைவிகளும், பெண் துறவிகளும் நம்மை வழிநடத்தியுள்ளனர். இனி பெண்கள் மேம்பாட்டைப் பற்றிப் பேசுவதுடன், பெண்கள் தலைமைப் பண்பை ஏற்பது குறித்துதான் பேச வேண்டும். பெண்களை மதிக்கும் சமூகமே மேன்மை அடையும்.

எல்லா திசைகளிலிருந்தும் புதிய சிந்தனைகளை நாம் வரவேற்றுக் கொண்டிருக்கிறோம். பழமை என்பதற்காக, கண்மூடித்தனமாக போற்றுவதும், தூற்றுவதும் தவறு. அதிலுள்ள சரி, தவறுகளை உணர்ந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.

யோகா என்பது சிறந்த அறிவியல். நமது உடலை, மனதை மேம்படுத்தும் சக்தி கொண்டது. இன்று உலக மக்கள் அனைவரும் அமைதியை விரும்புகின்றனர். போர்கள், பிரச்னைகளில் இருந்து மட்டுமின்றி மன அழுத்தத்திலிருந்தும் அமைதி பெறுவதற்கு மக்களுக்கு யோகப் பயிற்சி உதவுகிறது. யோகா என்பது புது யுகத்தை உருவாக்கி, மக்களிடையே சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தக் கூடியது. இதைக் கருத்தில் கொண்டே ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச யோகா தினத்தை உருவாக்கியது. இன்று உலகம் முழுவதும் யோகா பரவி வருகிறது. நமது மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாகத் திகழ்கிறது. எனவேதான், யோகாவைப் பரப்புகிறோம். ஈஷா யோகா மையத்தில் சாதாரண மனிதர்களை யோகிகளாக ஆக்குவது பாராட்டுக்குரியது' இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, பொன்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீபத் நாயக், விஜய்கோயல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.