close
Choose your channels

“ஆர்மோனியக் கலைஞன், இசை சாம்ராஜ்யம்” இளையராஜா பிறந்த நாள் இன்று...

Tuesday, June 2, 2020 • தமிழ் Comments

“ஆர்மோனியக் கலைஞன், இசை சாம்ராஜ்யம்” இளையராஜா பிறந்த நாள் இன்று...

 

“இறைவனுக்கு அடுத்தப்படியாக இந்த உலகில் எனக்கு இருக்கக் கூடிய ஒரே நண்பன் இந்த ஆர்மோனியம்தான்” என மாணவர்கள் மத்தியில் ஒருமுறை இளையராஜா உரையாற்றினாராம். இசை என்பதை தனது நண்பனாக மட்டுமல்ல, ஆன்மாவோடும் சேர்த்து வைத்து கொண்டாடியவர்தான் இளையராஜா. அவரின் இசை உணர்வில் மயங்காதவர் எவரும் இருக்க முடியாது என்று அடித்து சொல்லும் அளவிற்கு உணர்வு மிக்க இசைக் களஞ்சியத்தைத் தன்னுள் தேக்கி வைத்திருக்கும் ஒரு கலைஞன்.

இன்று அவருடைய 77 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கிறார். 1976 இல் அன்னக்கிளி படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமான இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் 1000 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இவரின் அற்புதமான இசையால் இதுவரை 4500 க்கும் மேற்பட்ட பாடல்கள் உருவாகி இருக்கின்றன. எந்த கலைஞனையும் யாரும் தராசில் வைத்து பார்க்க முடியாது. காரணம் எல்லாருக்குமே ஒரு தனிப்பட்ட திறமைகள் வாய்க்கப் பெற்றிருக்கும் என்பார்கள். ஆனால் இந்தக் கலைஞனனிடம் இருக்கும் அனைத்து வெளிப்பாடுகளுமே மற்றவர்களைவிட மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகத்தான் இருக்கிறது. அத்தகைய தனித்துவம் மிக்க இசையால் இன்று வரை தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது பல மொழி ரசிகர்களையும் கட்டிப் போட்டு இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பொதுவாக இவருடைய இசையை ரசிப்பதற்கு மொழி என்பது அவசியமே இல்லாத ஒன்று. மொழியே தெரியாத எந்த நாட்டினரும் இவருடைய இசையை கேட்கும்பொழுதே மயங்கி விடும் அளவிற்கு இவருடைய பாடலில் ஒரு புதிய உற்சாகமும், லயமும், உணர்வும் பொங்கி வழியும்.

கேட்கும் யாரையும் தனிப்பட்ட மெல்லிய உணர்வுக்கு ஆட்படுத்திக் கட்டிப் போடும் வித்தையை எங்குதான் கற்றாரோ எனப் பிரமிக்காதவர் எவரும் இருக்க முடியாது. கரகாட்டம், தெம்மாங்கு, ஜல்லிக்கட்டு என்ற மண்சார்ந்த அம்சங்களுக்குத் தன்னுடைய இசையால் புது வடிவத்தையே கொடுத்தவர். குலவை சத்தத்தையும் தன்னடைய ரசிகர்களை ரசிக்க வைத்தவர். கிராமிய இசையோடு கடம், சிங்காரி போன்ற கருவிகளையும் இணைத்து அழகு பார்த்தவர். ஜாஸ் கருவியோடு தபேலாவையும் இணைத்து வாசிப்பார். நையாண்டி இசைக் கோர்வையை டிரம்ஸில் வாசிக்கவும் செய்வார். இவர் செய்யும் அற்புதத்தில் மயங்கி தத்தளிக்கும் சிலர் கண்ணீர் வடிக்கவும் செய்கின்றனர்.

இசைக்குள் இருக்கும் உணர்வை மிக எளிமையாக வெளிக்கொண்டு வரும் இவருடைய கம்போஸிங் சாதாராண பாமரனுக்கு புலப்பட்டு விடுகிறது. பாடலுக்குள் பின்னால் இருக்கும் ஒட்டுமொத்த சூழலையும் அற்புதமாக வெளிப்படுத்தி விடும் ஒரு கோர்வையாகவே இவருடைய இசை இருக்கிறது. இவர் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இருக்கும் காதலின் தீபம் ஒன்று பாடலுக்கான மெட்டை மருத்துவமனையில் இருந்துகொண்டே வெறுமனே விசில் சத்தைத்தை வைத்து உருவாக்கினாராம். மற்ற இசைக் கலைஞர்கள் பல்லவி, சரணம், அடுத்து வரும் சரணம் எல்லாவற்றிற்கும் ஒரே இசை வடித்தை போட்டால் இவர் ஒவ்வொரு சரணத்திற்கும் ஒரு இசை கோர்வையை வடிவமைக்கிறார். இதுதான் இசை சாம்ராஜ்ஜியத்தின் தனித்தன்மையே என்று புலாங்கிதம் அடைபவர்களும் உண்டு.

அரிசிக் குத்தும் அக்காள் மகளே பாடலில் ஒலிக்கும் இசை மிகவும் நெருக்கமாக இருக்கும். காரணம் அரிசியைப் புடைக்கும் போது அப்படித்தான் நெருக்கமான ஓசை வரும். அப்படி ஒவ்வொரு வெளிப்பாட்டையும் அந்த உணர்வுக்குள் சென்று படம் பிடித்துக் காட்டும் வல்லமை இந்த மேதையிடம் அமுத சுரபியாக சுரந்து கொண்டிருக்கிறது. இதுவரை ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். ஆனால் இன்னும் ஒரு ஆயிரம் படத்திற்கு புதுமையான இசையைக் கொடுக்கும் அளவிற்கு ஒரு அமுதசுரபி இவரிடம் இருக்கிறது என்று ஒவ்வொரு ரசிகனும் கொண்டாடுகிறான். பாடல் வரி, வாத்தியங்கள், பாடகர்கள் எல்லாம் ஒரு கலவையாக சேர்ந்து ஒரு புதுவித உணர்வுக்குள் தள்ளிவிட்டு அதில் லயிக்க செய்யும் ஒரு விந்தைக்கார மனிதன் இசைஞானி இளையராஜா.

இவருடைய திறமையைப் பாராட்டி இதுவரை 5 தேசிய விருதுகள், பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருதுகள் எல்லாம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதையெல்லாம் விடவும் ஒரு பாமரன் தனது தனிமையைப் போக்கிக்கொள்ள எங்கோ ஒரு மூலையில் இவருடைய பாடலை வைத்துக்கொண்டு மெல்லிய உணர்வுக்கு ஆட்பட்டு லயித்துக் கிடக்கும் அந்தத் தருணம் தான் இவருக்கு மிகப் பெரிய புகழ் மாலையைக் கொடுக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. வாழ்த்துகள் இசைஞானி அவர்களே... உங்களுடைய அமுதசுரபி இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த பாமரனுக்காகச் சுரக்கட்டும்...

Get Breaking News Alerts From IndiaGlitz