close
Choose your channels

பிச்சையெடுத்து தொழிலதிபரான வாலிபர்: ரூ.1 லட்சம் கொடுக்க விரும்பும் ராகவா லாரன்ஸ்

Tuesday, August 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தினந்தோறும் பிச்சை எடுத்து அதில் கிடைத்த பணத்தை செலவு செய்தது போல மீதமுள்ள பணத்தை சேமித்து வைத்து இன்று டீ விற்பனை செய்யும் தொழில் அதிபராக மாறியிருக்கும் இளைஞர் ஒருவரின் தன்னம்பிக்கையை பாராட்டி அவருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுக்க விரும்புவதாக நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்

மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரடங்கு நேரத்தில் வேலை எதுவும் இன்றி வருமானம் எதுவும் இன்றி இருந்துள்ளார். இதனால் அவர் சில நாட்கள் மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுத்து உள்ளார். அதன் பின்னர் அவர் அலங்காநல்லூர் சென்று அந்த பகுதியில் பிச்சை எடுத்து உள்ளார். இவ்வாறு பிச்சை எடுத்த பணத்தை வைத்து ஒரு சிறு தொழில் செய்ய முடிவு செய்துள்ளார்

பிச்சை எடுத்து தினமும் செலவு செய்தது போக ரூ.7 ஆயிரம் மிச்சப்படுத்தி வைத்திருந்ததை அடுத்து, அந்த பணத்தில் ரூ.5000க்கு வாடகைக்கு வீடும் 2000 ரூபாய் தொழில் செய்யவும் செலவு செய்தார். தற்போது அவர் தினமும் காலை மாலை என இரண்டு வேளையும் டீ விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். ஒரு டீ பத்து ரூபாய் என விற்பனை செய்வதால் ஓரளவுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

ஆனால் இது பெரிய விஷயமல்ல! இதன் பிறகு அந்த இளைஞர் செய்வது தான் பெரிய விஷயம். தான் வேலை இல்லாமல் அனாதையாக சாப்பாடு இல்லாமல் கஷ்டபட்டது போல் யாரும் கஷ்டப்படக் கூடாது என்ற எண்ணத்தில் தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் 10 பேருக்கு இலவசமாக சாப்பாடு தந்து கொண்டிருக்கின்றார். இந்த சாப்பாட்டை அவரே வீட்டில் சமைத்து பார்சல் கட்டி சாப்பாடு இல்லாமல் தவிக்கும் முதியோர்களுக்கு கொண்டு சென்று கொடுக்கிறார் என்பது தான் ஆச்சரியமான ஒன்று.

அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் யாரும் இன்றி அனாதையாக இருக்கும் முதியவர்களுக்காக ஒரு அனாதை இல்லம் கட்டி அதில் அவர்களை பராமரிக்க வேண்டும் என்பதுதான் ஆசை என்றும் இப்போது உள்ள தொழில் மேலும் மேலும் அதிகரித்தால் இந்த ஆசையைத் தான் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த ஆசையை நிறைவேற்றும் தன்னம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், கடவுள் துணையும் இருந்தால் ஒருநாள் நிச்சயம் நிறைவேறும் என்று கூறியுள்ளார். ’இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்’ என்று இவரது வீடியோ முடிவடைகிறது.

இந்த வீடியோவை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறியதாவது: இந்த இளைஞனின் தன்னம்பிக்கையை பார்க்கும் பொழுது வாழ்க்கையில் எப்பேர்பட்ட மனிதனுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும், இவருக்கு என்னால் முடிந்த உதவியாக 1 லட்சம் கொடுக்க ஆசைப்படுகிறேன்.யாரேனும் இவரது தொடர்பு கிடைத்தால் பகிரவும், நன்றி. “இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்’ என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.