தமிழக ஊடகத்துறையில் கொரோனாவிற்கு முதல் பலி. அதிர்ச்சி தகவல்

சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 3500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் நேற்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாமர மக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் பாதிக்கப்பட்டும், பலியாகியும் வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தற்போது ஊடகத் துறையில் உள்ள ஒருவர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியான ராஜ் டிவியில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த வேல்முருகன் என்பவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துவிட்டதாக வெளியிட்டுள்ள தகவல் ஊடகத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக ஊடகத்துறையில் கொரோனா வைரஸால் பலியான முதல் நபர் வேல்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை பொது மக்களுக்கு கொண்டு செல்லும் ஊடகத்துறையினர் தங்களை பாதுகாக்க, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.