முதல்முதலில் மன்றம் ஆரம்பித்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரஜினி!

சமீபத்தில் மும்பையில் உள்ள ரஜினி ரசிகர் ஒருவரிடம் ரஜினிகாந்த் போன் செய்து அவர் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்வதாக கூறிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது 45 ஆண்டுகளுக்கு முன் தனக்கு முதன் முதலாக ரசிகர் மன்றம் ஆரம்பித்த ரசிகர் ஒருவரிடம் ரஜினிகாந்த் போன் செய்து பேசி உள்ள ஆடியோ வைரலாகி வருகிறது.

கடந்த 45 ஆண்டுகளுக்கு முதன்முதலில் ரஜினிகாந்த் அவர்களுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர் மதுரையை சேர்ந்த முத்துமணி. இவர் தற்போது உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு போன் செய்து ரஜினிகாந்த் உடல் நலம் விசாரித்தார்.

தனக்கு சளி மற்றும் நுரையீரல் தொந்தரவு இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை செய்து வருவதாகவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு வசதி இல்லை என்பதால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ரஜினியிடம் முத்துமணி கூறியுள்ளார்.

முத்துமணி மட்டுமின்றி அவருடைய மனைவியிடமும் உடல் நலம் விசாரித்த ரஜினி அவருடைய உடல் நலத்திற்காக தொடர்ந்து இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் கூறினார். முதன்முதலில் தனக்கு மன்றம் ஆரம்பித்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் போன் மூலம் உடல்நலம் விசாரித்த ரஜினியின் ஆடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.