எந்த பாடகருக்கும் இல்லாத சிறப்பு எஸ்பிபிக்கு உண்டு: ரஜினிகாந்த்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவிற்கு திரையுலகினர் அரசியல்வாதிகள் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எஸ்பிபி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இன்று மிகவும் சோகமான நாள். கடைசி நிமிடம் வரைக்கும் உயிருக்காக போராடிய எஸ்பிபி அவர்கள் நம்மை விட்டு பிரிந்த நாள். அவரது மறைவு மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.

எஸ்பிபி அவர்களுடைய பாடலுக்கும் அவரது குரலுக்கும் மயங்காதவர்களே இல்லை. அவருக்கு மிகவும் தெரிந்தவர்கள் அவரது பாட்டை விட அவருடைய குணாதிசயம் தான் ரொம்பவும் பிடிக்கும் அதற்கு காரணம் அவர் எல்லோரையும் மதிப்பவர். அருமையான அன்பான நபர்.

இந்தியத் திரையுலகம் எத்தனையோ பெரிய பாடகர்களை பெற்றுள்ளது. கிஷோர் குமார், டிஎம் சௌந்தர்ராஜன் ஆகியோர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் எஸ்பிபி அவர்களுக்கு உண்டு. அது என்னவென்றால் அவர்கள் எல்லாருமே ஒரு குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே பாடி உள்ளனர். ஆனால் நமது எஸ்பிபி அவர்கள் பல மொழிகளில் பாடியுள்ளார். இந்தியாவில் உள்ள குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ளவர்கள் அவருடைய பாடலை மிகவும் ரசித்தார்கள்.

எஸ்பிபி அவர்களின் குரல் நூறு ஆண்டுகளானாலும் கம்பீரமாக நம்மிடையே ஒலித்துக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு பாடகர் நம்மிடையே இல்லை எனும் போது மிகுந்த வருத்தமாக உள்ளது. அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.