புதுமணத் தம்பதிக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசு? மண்டபமே கலகலப்பான சம்பவம்!
இந்திய வரலாற்றில் முதன் முறையாக பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ எட்டவுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பெட்ரோல், டீசல் விலையுயர்வை குறித்த மீம்ஸ்களும் கருத்துகளும் நிரம்பி வருகின்றன.
அதோடு பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்தியா முழுவதும் பல இடங்களில் நூதனப் போராட்டங்களும் களைக்கட்டத் தொடங்கிவிட்டன. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றிற்கு வந்த ஒரு நபர் 5 லிட்டர் பெட்ரோலை புதுமணத் தம்பதிகளுக்கு பரிசாக வழங்கி இருக்கிறார். இதைச் சற்றும் எதிப்பாராத அத்தம்பதிகள் மிகுந்த மகிழ்ச்சியோடு பெட்ரோல் பரிசை வாங்கி கொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் கோட்டை பகுதியில் முகமது ரகுபதி என்பவருக்கும் நசியா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இத்திருமணத்திற்கு வந்த உறவினர் காசிம் 5 லிட்டர் பெட்ரோல் அடங்கிய ஒரு கேனை திருமணப் பரிசாக வழங்கினார். இதை அத்திருமண மண்டபத்தில் இருந்த அனைவரும் பார்த்து ஆச்சர்யமாக அடைந்துள்ளனர். ஆனால் பரிசு வழங்கிய காசிம் பெட்ரோல் விற்கும் விலைக்கு மாப்பிள்ளையும் பெண்ணும் ஒரு 10-15 நாட்கள் சந்தோஷமாக பைக்கில் சுத்தட்டுமே என கிண்டலாகத் தெரிவித்து உள்ளார். இத்தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகிறது.