நீளமான கதை சொல்லலால் இம்ப்ரஸ் செய்ய தடுமாறுகிறது 'ரெட்ரோ'
ஸ்டோன் பெஞ்ச் க்ரியேஷன்ஸ் மற்றும் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , பிரகாஷ் ராஜ், ஜெயராம், நாசர், கஜராஜா, விது, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ' ரெட்ரோ '.
வளர்ப்பு அப்பா திலக்கிற்காக ( ஜோஜூ ஜார்ஜ்) கிட்டத்தட்ட அடியாளாகவே வாழ்கிறார் பாரி என்கிற பாரிவேல் கண்ணன் ( சூர்யா) . பாரிக்கு ருக்மணி ( பூஜா ஹெக்டே) மீது காதல் . ஆனால் காதல் கல்யாணம் ஆக கைகூட வேண்டுமானால் பாரி கோபத்தையும் அவரது அடிதடியையும் விட்டுவிட வேண்டும் என்கிறார் ருக்மணி. ருக்மணியின் மீதான காதலால் அனைத்தையும் விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கை வாழ நினைக்கும் பாரியின் வாழ்க்கையில் அன்று முதல் பிரச்சனை துவங்குகிறது. ஏன் பாரியை சுற்றி இத்தனை பிரச்சனைகள், அவரது காதல் கைகூடியதா இல்லையா என்பது மீதிக் கதை
சூர்யா வழக்கம் போலவே உயிரைக் கொடுத்து நடிக்கிறார். உணர்வைக் கொட்டி காதலிக்கிறார். கார்த்திக் சுப்புராஜின் ப்ரேமில் மேலும் ஸ்மார்ட் ஆக தெரிகிறார். சூர்யாவிற்கு இவ்வளவு மெனக்கெட்ட படக்குழு பூஜா ஹெக்டேவின் லுக்கிலும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். அவர் நடிப்பு, காதல் காட்சிகள் என திறமையை காட்டினாலும் படத்தின் நாயகியாக அதுவும் ஒரு நாயகன் உயிரைக் கொடுத்து காதலிக்கும் நாயகி என்கிற பட்சத்தில் அந்த நாயகியை எவ்வளவு அழகாக காட்டியிருக்க வேண்டும். அதில் தவறிவிட்டார் இயக்குனர். ஜோஜு ஜார்ஜ் தமிழில் நடிக்கும் படம் என்றாலே அவர் அடியாளாக மட்டும் தான் தெரிவார் போல. இன்னும் வித்தியாசமான கதாபாத்திரங்களை அவருக்கு கொடுக்கலாம். இந்த படத்திலும் சோடை சொல்ல முடியாத நடிப்பை கொடுத்திருக்கிறார். அவரை அடுத்து சட்டென இடம் பிடிக்கிறார் விது. ஃப்ரஷ் முகமாக, துறுதுறுப்புடன் யார் இவர் என கேட்க வைக்கிறார். பிரகாஷ் ராஜ், ஜெயராம், நாசர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சீனியர் நடிகர்கள் என்பதால் சரியாக செய்து முடித்திருக்கிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய பலம் இசை. படம் வருவதற்கு முன்பே முகவரி போல் நிச்சயம் படத்திற்கு கூட்டத்தை கொண்டு வரும் . அதிலும் கனிமா பாடல் இந்த வருடத்தின் டாப் சார்ட் ரகம். பின்னணி இசையும் மிக அற்புதம். விஷுவல் ஆக பார்க்கும்பொழுது ' கனிமா...' பாடலை விட ' கண்ணாடி பூவே...' பாடல் சூர்யா ஸ்பெஷல் காதல் சோகப் பாடல். ' அஞ்சல ( வாரணம் ஆயிரம் ) பாடலை ஞாபகப்படுத்துகிறார்.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணா சினிமோட்டோகிராபியில் அந்தமான் தீவு கண்களுக்கு விருந்து. படம் முழுக்க கார்த்திக் சுப்புராஜின் கனவுக்கு மிக அற்புதமாகவே வர்ணம் பூசி இருக்கிறார் ஸ்ரேயாஸ். ஷாபி முகமது அலி எங்கே படத்தை கட் செய்வது எங்கே கோர்ப்பது என போராடி இருப்பது தெரிகிறது. படம் மிக நீளம்.
அத்தியாயங்களாக கதை சொல்லியே தீருவேன் என்கிற கார்த்திக் சுப்புராஜின் தீர்மானத்தால் வலிய வந்து பல காட்சிகளை புகுத்தி படத்தின் நீளத்தை அதிகரித்துக்கொண்டே சென்று இருப்பது தெரிகிறது. எத்தனை காலங்களுக்கு தான் இந்த அடிமைகளாக இருக்கும் கூட்டம் அதைக் காப்பாற்ற வரும் நாயகன் கதையை சொல்லிக்கொண்டே இருப்பார்கள் தெரியவில்லை. சூர்யா போன்ற தேர்ந்த நடிகரை இன்னமும் காதலிக்காக கடல் கடந்து செல்வது போல் கட்டுவதும் தேவையா எனத் தோன்றுகிறது. படத்தின் மிகப்பெரிய பலம் ஸ்டண்ட். ஸ்டண்ட் கோரியோகிராபர் கிச்சா கம்பக்தியின் திறமையின் அடிதடி கேலரி அருமை.
மொத்தத்தில் ' ரெட்ரோ' ... கார்த்திக் சுப்புராஜ் ஸ்பெஷல் கலர்ஃபுல் ரெட்ரோ டோன் - சந்தோஷ் நாராயணன் இசை காம்போவில் விஜய் சேதுபதி, விக்ரம், தனுஷ், சூப்பர் ஸ்டார் வரையிலும் பார்த்துவிட்டோம் சூர்யாவை எப்படி தவறவிட முடியும் என நினைப்போர் இந்தப் படத்தை தவறாமல் பார்க்கலாம். நிச்சயம் ' கங்குவா ' படம் கொடுத்த ஏமாற்றத்திற்கு இந்த படம் ஆறுதலாக இருக்கும்.
Comments