அதிகரிகக்கும் கொரோனா… கோவில் வழிபாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள்!

  • IndiaGlitz, [Wednesday,August 04 2021]

கொரோனா பரவல் அதிகரித்து இருக்கும் சில மாவட்டங்களில் தற்போது கோவில் வழிபாட்டிற்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான முடிவுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே அறிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைக் கண்டறிந்து அங்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுவருமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் தற்போது மாலை 5 மணிவரை மட்டுமே கடைகள் திறப்பதற்கு அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து அம்மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டு உள்ளார். மேலும் விலங்குகள் பலியிடுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல், திருவிழாக்கள் தேரோட்டம் நடத்துதல், ஜெபகூட்டங்கள் தொழுகைகள், கூட்டுப் பிரார்த்தனைகள், மத ஊர்வலங்கள் நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது.

இதேபோல ராமேஸ்வரம் மாவட்டத்தில் ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அங்குள்ள கடற்கரைகளில் கூடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்து ஆடி மாத திருவிழா நாட்களில் இராமநாதபுரம், பரமக்குடி இராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ள வணிக நிறுவனங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன.

இதைத்தவிர வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருவதற்கு தடைவிதித்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.