ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறாத 'ஆர்.ஆர்.ஆர்', 'இரவின் நிழல்: தகுதி பெற்ற படம் எது தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,September 21 2022]

இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட இருக்கும் இந்திய திரைப்படங்களின் பட்டியலில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’, பார்த்திபன் 'இரவின் நிழல்’ உட்பட பல படங்கள் இருந்த நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ‘இரவின் நிழல்’ ஆகிய 2 திரைப்படங்களும் தகுதி பெறவில்லை என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

95வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்படும் திரைப்படத்தை தேர்வு செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவிலிருந்து ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘ஆர்.ஆர்.ஆர்’, இரவில் நிலையம் உள்பட பல திரைப்படங்கள் பட்டியலில் இடம்பெற்ற நிலையில் தற்போது குஜராத்தி மொழி திரைப்படமான ‘ஷெல்லோ ஷோ’ என்ற படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்திலுள்ள கிராமம் ஒன்றில் சிறு வயதில் இருந்தே திரைப்படங்கள் மீது ஆர்வம் கொண்ட சிறுவனின் நினைவுகள் தான் இந்த படம் என்பதும் பவின் ரபாரி, பவேஷ் ஸ்ரீமாலி, ரிச்சா மீனா, திபென் ராவல் மற்றும் பரேஷ் மேத்தா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை பான் நளின் என்பவர் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

66வது Valladolid சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் ஸ்பைக் விருதை வென்ற இந்த படத்தை சித்தார்த் ராய் கபூரின் ராய் கபூர் பிலிம்ஸ், ஜுகாத் மோஷன் பிக்சர்ஸ், மான்சூன் பிலிம்ஸ், செலோ ஷோ எல்எல்பி மற்றும் மார்க் டுவால் இணைந்து தயரித்துள்ளனர்.

ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் சார்பில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் நிச்சயம் அனுப்பப்படும் என்றும் குறிப்பாக ராம் சரண் தேஜா அல்லது ஜூனியர் பாலையாவுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஆஸ்கர் பட்டியலில் ‘ஆர்.ஆர்.ஆர்’ இடம்பெறாதது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.