ருத்ரம்மாதேவி. திரைவிமர்சனம்

  • IndiaGlitz, [Friday,October 16 2015]

எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' படத்தின் பிரமாண்டத்தை பார்த்த ரசிகர்களுக்கு அதே பாணியில், அதே படத்தில் நடித்த அனுஷ்கா, ராணா ஆகியோர் நடித்திருப்பதால், 'ருத்ரம்மாதேவி' படத்தையும் அதே எதிர்பார்ப்பில் தியேட்டருக்குள் சென்றிருப்பார்கள். ஆனால் ரசிகர்களின் அந்த எதிர்பாரப்பை இந்த ருத்ரம்மாதேவி' பூர்த்தி செய்தாரா? என்பதை தற்போது பார்ப்போம்.

காகித்ய ராஜ்யத்தில் ஆண் வாரிசு இல்லாததால், அண்டை நாடுகள் எந்த நேரமும் படையெடுத்து வர தயாராக இருக்கின்றது. அதுமட்டுமின்றி மன்னரின் பங்காளிகளே சூழ்ச்சி செய்து ஆட்சியை பிடிக்க சதி செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் காகித்ய நாட்டின் ராணிக்கு குழந்தை பிறக்க போவதாக தகவல்கள் வருகின்றது. ஆண் குழந்தை பிறந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற மக்கள் வேண்டிக்கொண்டிருக்க, பெண் குழந்தை பிறந்தால் படையெடுக்க அண்டை நாடுகளும், உள்ளூர் சதிகாரர்களும் தயாராக இருக்க, பிறந்தது பெண் குழந்தை. ஆனால் புத்திசாலியான அமைச்சர் பிரகாஷ்ராஜ், பிறந்தது பெண் என்பதை மறைத்து, ஆண் குழந்தை பிறந்ததாக நாட்டை காப்பாற்றுவதற்காக அனைவரையும் ஏமாற்றுகிறார். அதுமட்டுமின்றி அந்த குழந்தையையே பெண் என்றால் என்ன என்பதே தெரியாமல் 'ருத்ரம்மதேவன்' என்ற பெயரில் வளர்த்து வருகிறார்.


இந்நிலையில் ருத்ரம்மதேவனுக்கு 14 வயது வரும்போது ஏற்படும் உடல்பருவ மாற்றத்தால் தான் பெண் என்பது தெரிய வருகிறது. அரசரும், அமைச்சரும் எதற்காக அவரை பெண் என்பதை மறைத்து இளவரசராக வளர்த்தோம் என்ற உண்மையை கூறுகின்றனர். அதன்பின்னர் மக்களின் நன்மைக்காக தான் பெண் என்பதை அவரும் மறைத்துக்கொண்டு ருத்ரம்மதேவியாக மாறி மக்களுக்கு நன்மை செய்கிறார். ஒருபுறம் எதிரி நாடுகளின் அச்சுறுத்தல், மறுபுறமும் உறவினர்களின் சதி, இன்னொருபுறம் கோணகான ரெட்டி என்னும் கள்வனின் பயமுறுத்தல் என அனைத்தையும் சமாளித்து ஆட்சி செய்து வரும் நிலையில் எதிரி நாட்டின் ஒற்றன் மூலம் மன்னரின் பங்காளிகளுக்கும், எதிரிகளுக்கும் ருத்ரம்மாதேவன்' பெண் என்பது தெரியவருகிறது. இதன் பின்னர் அண்டை நாடுகளும், சதிகாரர்களும் போருக்கு தயாராக, அரசர் மற்றும் இளவரசி ருத்ரம்மாதேவி எடுக்கும் அதிரடி முடிவுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்துதான் அனுஷ்கா எண்ட்ரி ஆகிறார். அதன்பிறகு படத்தை சுவாரஸியமாக எடுத்து செல்லும் முழு பொறுப்பும் அவர் தலைமீதுதான் விழுகிறது. கிட்டத்தட்ட படம் முழுவதும் முறைப்பாகவே வருகிறார். ஆணாக நடித்து கொண்டிருந்தாலும் பெண்ணுக்குள் உள்ள காதல் வெளிப்படும்போது அதை மக்களுக்காக தியாகம் செய்கிறார். அவருடைய உயரமும், உடல்வாகும் ஆண் வேடத்திற்கு பொருத்தமாக அமைகிறது., வாள் சண்டையில் வேகம், வசனங்களில் வீரம் என அனுஷ்கா படம் முழுவதும் தன்னுடைய பங்கை தேவைக்கு அதிகமாக செய்துள்ளார்.

அனுஷ்காவை தவிர மற்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே படுவீக்காக உள்ளது என்பது பெரிய குறை. அரசரின் பங்காளியாக இருந்து கொண்டு 25 வருடங்களாக அரண்மனையில் இருப்பவர்கள், இளவரசர் ஒரு பெண் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் சுமன், கிருஷ்ணராஜ் கேரக்டர்கள் நம்பும்படியாக இல்லை. மேலும் இந்த சகோதரர்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் புத்திசாலித்தனமாக இல்லாமல் குழந்தைத்தனமாக இருப்பது மற்றொரு மைனஸ்.

அல்லு அர்ஜூன் கேரக்டர் முதலில் ராபிஹூட் பாணியில் இருப்பவர்களிடம் கொள்ளையடித்து, இல்லாதவர்களுக்கும் கொடுக்கும்படியாக வந்தாலும், கிளைமாக்ஸில் அவர் யார் என்பது தெரியவரும்போது கொஞ்சம் எதிர்பாராத சஸ்பென்ஸ்

'பாகுபலி'யில் ஆர்ப்பாட்டமான நடிப்பை கொடுத்த ராணாவுக்கு இந்த படத்தில் வாய்ப்புகள் குறைவுதான். அந்த வாய்ப்புகளிலும் சொல்லிக்கொள்ளும்படியான நடிப்பை வெளிப்படுத்தும் காட்சிகள் இல்லை.

அழகு தேவதையாக வரும் நித்யாமேனன், பெண் என்று தெரியாமல் இளவரசர் ருத்ரம்மாதேவனை காதலித்து பின்னர் திருமணமும் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பின்னர் அவர் ருத்ரம்மாதேவிடம் பேசும் வசனங்கள் ஒரு எதிர்பாராத அதிர்ச்சி.

காகித்ய நாட்டின் அமைச்சராக வரும் பிரகாஷ்ராஜின் நடிப்புக்கு தீனி போடும் வகையிலான காட்சிகள் எதுவுமே இல்லாதது படத்தின் பெரிய குறை

அனாம்பிகா என்ற கேரக்டரில் வரும் கேதரின் தெரசா எதற்காக இந்த படத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார் என்று படம் முடியும் வரையில் தெரியவில்லை.

இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் பெரிதாக சோபிக்காவிட்டாலும் பின்னணி இசையை அற்புதமாக அமைத்துள்ளார். குறிப்பாக போர்க்காட்சிகள் ஓரளவுக்காவது பார்க்கும்படி இருப்பது இவருடைய பின்னணி இசையால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணி, காஸ்ட்யூம் டிசைனர், ஒளிப்பதிவாளர் அஜயன் வின்செண்ட், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர்களின் பணிகளில் எந்த குறையும் சொல்ல முடியாது.

இயக்குனர் குணசேகர் ஒரு நல்ல உண்மைக்கதையை தேர்வு செய்திருந்தபோதிலும், அதை சுவாரசியமாக கொடுக்க தவறியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். ஒரு அரசர் காலத்து திரைக்கதையில் திடுக்கிடும் திருப்பங்கள் மிகவும் அவசியம். ஆனால் இந்த படம் எந்தவொரு திருப்பமும் இல்லாமல் நேர்கோட்டில் செல்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் பாகுபலி, புலி அளவுக்கு நேர்த்தியாக இல்லை. பல இடங்களில் கார்ட்டூன் படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இரண்டாவது பாதி மிக மிக மெதுவாக நகர்வது படத்தின் பெரிய மைனஸ்.

மொத்தத்தில் அனுஷ்காவின் கடுமையான உழைப்பு, இளையராஜாவின் பின்னணி இசை ஆகியவைகளுக்காக ஒருமுறை பார்க்கலாம்.

More News

போலீஸ் கமிஷனரை சந்தித்தது ஏன்? நாசர்-விஷால் விளக்கம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், பாண்டவர் அணியினர் என்று கூறப்படும் விஷால் அணியினர்...

HCL ஷிவ்நாடாரின் பாராட்டை பெற்ற 'தனி ஒருவன்'

ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ஊடகங்கள் மற்றும் திரையுலகினர்களின் பாராட்டை பெற்று மாபெரும் சூப்பர் ஹிட்...

நடிகர் சங்க தேர்தல் குறித்து பாரதிராஜா கருத்து

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் தரப்பினர்கள் ஒருவருக்கொருவர் கருத்து மோதல்...

நடிகர் சங்க தேர்தல்: வழிகாட்டும் நெறிமுறைகள் அறிவிப்பு

நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி பத்மனாபன் அவர்கள் மேற்பார்வையில் நடைபெறவுள்ள நிலையில்...

10 எண்றதுக்குள்ள டூயட் இல்லாத காதல் படம். விக்ரம்

விக்ரம், சமந்தா நடிப்பில் விஜய் மில்டன் இயக்கிய '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது...