Download App

Saamy 2 (aka) Saamy Square Review

சாமி 2:  ஹரியின் வழக்கமான ஆக்சன் பார்முலா

மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான 'சாமி' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு சற்று அதிகம் இருந்தது. இந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா? என்பதை தற்போது பார்ப்போம்

முதல் பாதியில் செங்கல்சுள்ளையில் பெருமாள்பிச்சையை சாமி விக்ரம் கொல்வதில் இருந்து இந்த இரண்டாம் பாகம் ஆரம்பமாகிறது. பெருமாள் பிச்சையின் மூன்று மகன்களில் ஒருவரான பாபிசிம்ஹா, கொழும்பில் இருந்து தனது தந்தை காணாமல் போன மர்மத்தை கண்டுபிடிக்க திருநெல்வேலி வருகிறார். தனது தந்தையை சாமி உயிருடன் எரித்து கொன்றதை கண்டுபிடிக்கும் பாபிசிம்ஹா, தந்தையை கொன்ற விக்ரமையும், விக்ரம் மனைவி நிறைமாத ஐஸ்வர்யாவையும் கொலை செய்துவிட்டு மீண்டும் இலங்கை சென்று விடுகிறார். டெல்லிகணேஷ்-சுமித்ரா தம்பதியினரால் வளர்க்கப்படும் விக்ரம்-ஐஸ்வர்யா மகன் ராமசாமி, தந்தையை கொலை செய்த பாபிசிம்ஹாவை ஐபிஎஸ் அதிகாரி என்ற அதிகாரத்துடன் எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் மீதிக்கதை

'சாமி' படத்தில் 15 வருடங்களுக்கு முன் பார்த்த அதே மிடுக்கு, அதே உடற்கட்டு விக்ரமிடம் இருப்பது பெரும் ஆச்சரியம். காக்கி சட்டைக்கு கச்சிதமாக பொருந்தும் விக்ரம், படம் முழுவதும் கொஞ்சம் விரைப்பாகவே உள்ளார். முதல் பாகத்தில் இருந்த காமெடி மற்றும் ரொமான்ஸ் இதில் மிஸ்ஸிங் என்றாலும் தனி ஆளாக படத்தை தாங்கி பிடித்துள்ளார். 

வழக்கமான ஒரு தமிழ்ப்படத்தில் ஹீரோயின் என்றால் ஹீரோவை விழுந்து விழுந்து காதலிக்க வேண்டும், ஹீரோ வேண்டாம் என்று சொன்னாலும் விரட்டி விரட்டி காதலிக்க வேண்டும், டூயட் பாட வேண்டும், காமெடி நடிகருடன் சேர்ந்து காமெடி செய்ய வேண்டும் என்ற ஃபார்முலாவை கீர்த்தி சுரேஷும் பின்பற்றியுள்ளார். 

ஐஸ்வர்யா ஒரு பாடலுக்கு வந்து விக்ரமுடன் டான்ஸ் ஆடி பின்னர் பரிதாபமாக கொலை செய்யப்படுகிறார். த்ரிஷாவின் இடத்தை அவரால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பது வருத்தமான விஷயம்

யோகிபாபு, கருணாகரன், காளிவெங்கட், பாலசரவணன் போன்ற காமெடி நடிகர்கள் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான காமெடி காட்சிகளில் நடித்து டிரெண்டுக்கு ஏற்றவாறு அசத்தி கொண்டிருக்கும் நிலையில் சூரி இன்னும் பத்து வருடங்களுக்கு முன் இருந்த காமெடியை செய்து கொண்டிருக்கின்றார். அவர் சுதாரிக்க வேண்டிய நேரம் இது.

பாபிசிம்ஹா வில்லன் வேடத்தில் மிரட்டியிருக்கின்றார். ஆரம்ப காட்சியிலேயே கொடூரமாக கொலை செய்வது முதல் கிளைமாக்ஸில் விக்ரமுடன் மோதும் காட்சி வரை தனது அதிகபட்ச உழைப்பை கொடுத்துள்ளார் பாபிசிம்ஹா

முதல் பாகத்தில் இருந்த டெல்லி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுமித்ரா ஆகியோர்களை குறைவாக பயன்படுத்தியிருந்தாலும் சரியான காட்சிகளுக்கு பயன்படுத்தியுள்ளார் இயக்குனர். அதேபோல் இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ்கான், சாஞ்சீவ், சாம்ஸ் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பும் ஓகே ரகம்

தேவிஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் அனைத்துமே எங்கேயோ கேட்டது போல் உள்ளது. பின்னணி இசையில் கொஞ்சம் இரைச்சலை குறைத்திருக்கலாம்.

கேமிராமேன் பிரியன், வெங்கடேஷ் ஆகியோர்களுக்கு சரியான வேலை. கேமிரா ஒரு காட்சியில் கூட நிற்கவில்லை. கார், லாரி, முதல் ஹெலிகாப்டர் வரை விரட்டி கொண்டே உள்ளது. கதைக்கேற்ற வகையில் படத்தொகுப்பும் அமைந்துள்ளது.

வில்லன் சட்டவிரோதமாக என்ன தொழில் செய்கிறார் என்பதை ஹீரோ கண்டுபிடிப்பது அதன் பின்னர் கார், ரயில், ஹெலிகாப்டர், விமானம் மூலம் பறந்து பறந்து வில்லனை விரட்டுவது என்ற வழக்கமான பார்முலாவை இயக்குனர் ஹரி 'சிங்கம்' முதல் பாகத்தில் இருந்து இந்த படம் வரை பயன்படுத்தி வருகிறார். கொஞ்சம் வித்தியாசமாக திரைக்கதையை யோசித்திருக்கலாம். இன்னும் எத்தனை படத்திற்கு வரிசையாக கார்கள் வேகமாக ஓடுவதை காண்பிக்க போகிறார் என்பது தெரியவில்லை. இருப்பினும் ஆக்சன் பிரியர்களை திருப்தி செய்யும் வகையில் ஆங்காங்கே விறுவிறுப்பான காட்சிகளை வைத்து ஒருசில இடங்களில் கைதட்டலும் வாங்கிவிடுகிறார் இயக்குனர் ஹரி. 

மொத்தத்தில் விக்ரம், பாபிசிம்ஹா நடிப்புக்காகவும், ஆக்சன் பிரியர்களும் ஒருமுறை பார்க்கலாம்.

Rating : 2.0 / 5.0