ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்ட சேத்தன் சகாரியா… அப்படி என்ன செய்துவிட்டார்?

முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் கால்பதித்து இருக்கும் இளம் வீரர் ஒருவரை ரசிகர்கள் அனைவரும் தல… சின்ன தல… என்று கூட அழைக்கத் தொடங்கிவிட்டனர். காரணம் நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்று இருந்த சேத்தன் சகாரியா தனது அபாரமான பந்து வீச்சால் தொடர்ந்து சிஎஸ்கேவின் 3 முக்கிய வீரர்களை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். இவரது அசால்ட்டான பந்து வீச்சைப் பார்த்த ரசிகர்கள் நட்டி மாதிரி இவரும் ஒரு மிகச்சிறந்த பவுலர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

12 ஆவது ஐபிஎல் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கேவை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதையடுத்து தல டோனி தலைமையிலான சிஎஸ்கே அணி களத்தில் இறங்கி விளையாடத் தொடங்கியது. அதையடுத்து முதல் ஓவரில் சிஎஸ்கே சொதப்பினாலும் அடுத்தடுத்து தன்னை நிலை நிறுத்திக்கொண்டு ரன் ரேட்டிங்கை குவிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் கெய்க்வாட் விக்கெட்டை முஸ்தாபிசூர் ரஹ்மான் வீழ்த்தினார். அடுத்து 33 ரன்கள் எடுத்த பிளசிஸ் மற்றும் ஜடேஜாவின் விக்கெட்டுகளை கிறிஸ்மோரிஸ் வீழ்த்தினார். அடுத்து மொயின் அலியின் விக்கெட்டை ராகுல் திவேட்டியா வீழ்த்த இந்நிலையில் தான் நம்ம சேத்தன் சகாரியா களத்தில் இறங்கினார். சிஎஸ்கே தொடர்ந்து ரன் ரேட்டிங்கை எகிற வைத்துக் கொண்டு இருந்த சமயத்தில் சேத்தன் சிஎஸ்கேவின் ரெய்னா, அம்பத்தி நாயுடு, கேப்டன் டோனி எனத் தொடர்ந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பார்வையாளர்களை அலற விட்டார்.

இந்த பந்து வீச்சு திறமையைப் பார்த்த ரசிகர்கள் சேத்தன் சகாரியாவை கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன்பு பஞ்சாப் அணிக்கு எதிராக களம் இறங்கியபோதும் சகாரியா அதன் கேப்டன் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் விக்கெட்டுகளை வீழ்த்தி ரசிகர்களை உற்சாகப் படுத்தி இருந்தார். இதனால் சகாரியா தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் கூறப்படுகின்றன. இந்நிலையில் சின்னத் தல… ராஜஸ்தான் சிங்கம் போன்ற அடைமொழிகளால் சகாரியாவை ரசிகர்கள் பாராட்டவும் தொடங்கி விட்டனர்.