Download App

Sandakozhi 2 Review

'சண்டக்கோழி 2' : கமர்ஷியல் சரவெடி

கோலிவுட் திரையுலகில் தற்போது இரண்டாம் பாக சீசன் கொடிகட்டி பறக்கும் நிலையில் பல இரண்டாம் பாக திரைப்படங்கள் வெற்றியும் தோல்வியும் அடைந்து வருகிறது. இந்த நிலையில் விஷால், லிங்குசாமி, யுவன்ஷங்கர்ராஜா கூட்டணியில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான 'சண்டக்கோழி 2' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் மரியாதையை இந்த இரண்டாம் பாகம் காப்பாற்றியதா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்

தேனி அருகே ஏழு ஊர்க்ள் சேர்ந்து நடத்தும் ஒரு திருவிழாவில் ஒரு சின்ன பிரச்சனை பெரிய பிரச்சனையாக கொழுந்துவிட்டு எரிந்து அதனால் வரலட்சுமியின் கணவர் கொலை செய்யப்படுகிறார். தனது கணவரை கொலை செய்தவரின் குடும்பத்தில் ஒரு உயிர் கூட மிஞ்சக்கூடாது என்று ஆக்ரோஷமாக வரலட்சுமி தனது ஆட்களுக்கு ஆணையிட அதன்படி பல உயிர்கள் பலியாகின்றது. இருப்பினும் வரலட்சுமியின் கணவரை கொன்றவர்களில் அன்பு என்பவர் மட்டும் தப்பித்து ராஜ்கிரணிடம் சரண் அடைகிறார். தன்னிடம் அடைக்கலமாக வந்த அன்புவை தனது உயிரை கொடுத்தும் காப்பாற்றுவேன் என்று ராஜ்கிரண் வாக்கு கொடுக்க, ராஜ்கிரணின் பிடியில் இருக்கும் அன்புவை கொல்லாமல் தாலியை கழட்ட மாட்டேன், பொட்டையும் அழிக்க மாட்டேன்  என வரலட்சுமி சவால் விட, இருவரில் யார் வெற்றி பெற்றார் என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை

படம் ஆரம்பித்து 15 நிமிடங்கள் கழித்து விஷால் அறிமுகமானாலும் அதன்பின்னர் விஷாலின் கேரக்டர்தான் படத்தை தூக்கி நிறுத்துகிறது. அமைதியான ஆவேசம், கீர்த்தி சுரேஷிடம் வெட்கம் கலந்த காதல், எதிரியிடம் இருந்து அன்புவை காப்பாற்ற அடுத்தடுத்து போடும் திட்டம் என விஷால் நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. 

சாவித்திரி கேரக்டரையே அசால்ட்டாக ஊதித்தள்ளிய கீர்த்திசுரேஷுக்கு, மீரா ஜாஸ்மின் கேரக்டரில் நடிப்பது எல்லாம் சர்வ சாதாரணம் என்பதை நிரூபித்துள்ளார். அசல் கிராமத்து பெண்ணாகவே மாறி, மதுரை ஸ்லாங்கில் தமிழ் பேசி அசத்தியுள்ளார். ராஜ்கிரணுடன் ஒரே ஒரு காட்சி என்றாலும் அந்த காட்சியில் அவரது கள்ளங்கபடம் இல்லாத நடிப்பு ரசிக்க வைக்கின்றது. 

நெகட்டிவ் கேரக்டரில் வரலட்சுமி ரிஸ்க் எடுத்து நன்றாக நடித்திருந்தாலும், அவருடைய கேரக்டர் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை வெட்டிடுவேன், குத்திடுவேன் என்று உதார் விடுகிறதே தவிர எந்த செயலும் இல்லை. அவர் போடும் திட்டங்களும் புத்திசாலித்தனமான இல்லை. மேலும் வரலட்சுமி நடிப்பில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் தெரிவதால் ரசிக்க முடியவில்லை

13 வருடத்திற்கு முன் 'சண்டக்கோழி' முதல் பாகத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல் ராஜ்கிரண் இந்த படத்தில் இருப்பது ஆச்சரியத்தை வரவழைக்கின்றது. அவருடைய வழக்கமான கெத்தான நடிப்பு படத்திற்கு ஒரு பிளஸ்

கஞ்சாகருப்பு மற்றும் முனிஷ்காந்த் படத்தின் கலகலப்புக்கு உதவுகின்றனர். குறிப்பாக ராஜ்கிரண் போல் வேஷமிட்டு முனிஷ்காந்த் நடிக்கும் காட்சிகள் ரசிக்கும் வகையில் உள்ளது.

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ஒருசில பாடல்கள் ஏற்கனவே கேட்ட மாதிரி இருந்தாலும் 'கம்பத்து பொண்ணு பாடல் ரசிக்கும் வகையில் உள்ளது. அதே நேரத்தில் பின்னணி இசை சூப்பராக உள்ளது. குறிப்பாக வரலட்சுமி தோன்றும் காட்சிகளின் பின்னணி வரை அபாரம்' நிஜ திருவிழா போன்றே செட் அமைத்த கலை இயக்குனருக்கும், அந்த திருவிழா காட்சிகளை அழகாக படம் பிடித்த ஒளிப்பதிவாளர் சக்திவேலுக்கும் பாராட்டுக்கள். இருப்பினும் இரண்டரை மணி நேர படத்தில் ஒன்றரை மணி நேரம் திருவிழா காட்சிகள் இருப்பது படத்தொகுப்பில் உள்ள குறையாக பார்க்கப்படுகிறது.

இயக்குனர் லிங்குசாமி ஒரு கமர்ஷியல் கதையை தேர்வு செய்து அதை பக்காவாக அளித்துள்ளார். விஷாலுக்கு பொருத்தமான ஆக்சன், ரொமான்ஸ் காட்சிகளை வைத்து முதல் பாகத்தின் கதையையும் இணைத்து ஆங்காங்கே சின்ன சின்ன டுவிஸ்ட் காட்சிகள் வைத்துள்ளதால் படம் போரடிக்காமல் நகர்கிறது. முதல் பாக வில்லன் லால் கேரக்டரை சரியான இடத்தில் இணைத்தது இயக்குனரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. காதில் பூ சுற்றும் ஒருசில காட்சிகளை கண்டுகொள்ளாமல் லாஜிக்கை மறந்துவிட்டு ஒரு கமர்ஷியல் சினிமா என்ற வகையில் இந்த படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்

Rating : 2.5 / 5.0