Download App

Sangathamizhan Review

சங்கத்தமிழன் -பார்வையாளர்களை குறைத்து மதிப்பிடுகிறான் 

மசாலா திரைப்படங்கள் என்பவை உலகில் அதிகமான மக்களால் விரும்ப படுபவை குறிப்பாக தமிழர்கள் அவைகளை கொண்டாடுவார்கள். ஆனால் அனைவருக்கும் பிடிக்கும் படியான மசாலா படத்தை எடுப்பது அவ்வளவு சுலபமல்ல அதனால்தான் அதை சிறப்பாக செய்யும் இயக்குனர்கள் கோடி கோடியாக சம்பளம் வாங்குகிறார்கள். பல தடைகளை தாண்டி ஒரு வழியாக வெளிவந்திருக்கும் சங்க தமிழன் ரசிகர்களின் மசாலா எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். 

முருகன்  (விஜய் சேதுபதி) சென்னையில் சினிமா காமடி நடிகர் ஆக வேண்டும் என்று வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருக்கிறார் அவர் நண்பர் சூரியோ கதாநாயகன் ஆக வேண்டும் என்று ஆசை படுகிறார். இருவரும் பப்பில் சரக்கு அடிக்க செல்ல அங்கு பணக்கார பெண் ராசி கண்ணாவுடன் நட்பாகிறார்கள் பின்பு அதுவே காதலாகவும் மாறுகிறது. ராசியின் அப்பா ஒரு கொடூரமான மும்பை தொழிலதிபர் அவர் தேனி கிராமத்தில் மக்களுக்கு எதிராக  ஒரு ஸ்டெர்லைட் போன்ற தொழிற்ச்சாலை கட்ட உள்ளூர் அரசியல்வாதியுடன் திட்டம் தீட்டி கொண்டிருக்கிறார். மகள் ஒரு சாதாரண ஆளை காதலிக்கிறாள் என்பதை தெரிந்து கொண்ட வில்லன் அவனை தீர்த்து கட்ட ஆள் அனுப்புகிறான் பிறகு அவன் புகைப்படத்தை பார்த்தவுடன் நேரில் அழைக்கிறான். வில்லன் விஜய் சேதுபதியிடம் தேனி கிராமத்துக்கு சென்று அங்கு தமிழ் என்கிற ஆள் போல் நடித்து ஒரு காரியம் சாதித்தால் பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பது மட்டுமல்லாமல் பத்து கோடியும் தருவதாக சொல்கிறான் விஜய்யும் சம்மதிக்கிறார். யாரந்த தமிழ்,  நடிக்க சென்ற முருகன் என்ன ஆனான் என்பதே மீதி அரத பழமையான கதை. 

ரஜினி, அஜித் , விஜய் செய்வது போல முழுக்க முழுக்க மசாலா ஹீரோவாக விஜய் சேதுபதி வளம் வருகிறார்.   காமடி, காதல், சண்டை, மக்கள் தலைவன் பஞ்ச் டைலாக் என்று எதிலும் குறை வைக்க வில்லை என்பது ஒரு புறம் இருக்க அவரிடம் ரசிகர்கள் குறைந்த பட்சம் வித்தியாசமான நல்ல கதாபாத்திரம் மற்றும் கதை தேர்வை எதிர்பார்ப்பார்கள் என்பதை சுத்தமாக மனதில் கொள்ளாமல் இதில் நடித்திருக்கிறார் என்பதும் நிதர்சனம். அதிலும் சொல்ல வரும் மிக முக்கியமான பிரச்சினையை இவ்வளவு மேம்போக்காக போலித்தனமாக சொல்லும் படத்தை அவர் தேர்வு செய்தது அவர் நிஜமான ரசிகர்களை நிச்சயம் ஏமாற்றும். ராசி கண்ணா அழகாக இருக்கிறார் தவிர பாடல்களிலும் காதல் காட்சிகளிலும் சொன்னதை செய்யும் கிளி பிள்ளையாக வந்து போகிறார். திறமையான நடிகை நிவேதா பெத்துராஜை அநியாயத்துக்கு வீணடித்திருக்கிறார்கள். கிட்ட தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்திருக்கும் சூரி எவ்வளவு முயன்றும் சிரிப்பை வரவழைக்க முடியவில்லை காரணம் எழுத்தில் இருக்கும் கற்பனை வரட்சி. அஷுடோஷ் ராணா கிராமத்து வில்லனாக மிகை நடிப்பை தருகிறார். அந்த மும்பை வில்லன் ஓகே ராகம். நாசர் மற்றும் இதர நடிகர்கள் கடமைக்கு வந்து போகிறார்கள்.

சங்க தமிழன் படத்தில் ப்ளஸ்ஸை தேடி பார்த்தால் முதல் பாதி கொஞ்சம் கலகலப்பாக போகிறது அதில் ஒரு காட்சியில் ராசியின் தோழி கல்யாணத்துக்கு முன்பாக கர்ப்பமாக அவளுக்கு விஜய் சேதுபதி செய்யும் ஆழமான உதவி கவனம் ஈர்க்கிறது. 

சறுக்கல்கள் நிறைந்த இந்த திரைக்கதையில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பழமையான கற்பனை பஞ்சம் மிகுந்த காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைத்திருப்பது. விஜய் சேதுபதி யார் என்று இரண்டு ட்விஸ்டுகளை பெரிதும் நம்பியிருக்கிறார்கள் அவை இரண்டுமே யு கே ஜி மாணவர்களை கூட ஆசிரியப்படுத்தவில்லை என்பது பரிதாபம். விஜய் சேதுபதியின் உடல் வாகுக்கும் உடல் மொழிக்கும் சற்றும் பொருந்தாத சண்டை காட்சிகள் இம்சிக்கின்றன. 

சங்க தமிழன் படத்தில் ஆக சிறந்த வேலையை செய்திருப்பவர் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். சிட்டிக்கு ஒரு கலர் கிராமத்துக்கு ஒரு கலர் என்று எல்லா காட்சிகளையும் அழகாக வடிவமைத்திருக்கிறார். விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. பின்னணி இசையில் தான் இரைச்சல் கச்சேரி நடத்தி கடுப்பேற்றுகிறார்கள். பாரம்பரியம் மிக்க தயாரிப்பு நிறுவனமான விஜயா பொருட்ச்செலவில் எந்த குறையும் வைக்க வில்லை நிஜமாக கிராமத்துக்கு ரோடு போட்டது உட்பட. விஜய் சந்தர் பழமையான கதையை கையிலெடுத்து அதை அதை விட பழமையான திரைக்கதை மற்றும் பாத்திர படைப்பை செய்து கொஞ்சம் பொழுது போக்கையும் நிறைய நெளியவைக்கும் தருணங்களையும் தந்து மீண்டும் ஸ்கெட்ச் போட்டிருக்கிறார். 

விஜய் சேதுபதியின் அதி தீவிர ரசிகர்களும் போலியான சமூக அக்கறையை திரையில் வரவேற்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் சங்க தமிழன்.

 

Rating : 2.3 / 5.0